பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

௭௪

முன்னுரை 


சாதியக் கொள்கையையும், அவற்றுக்குத் தகுந்த வாழ்வியல் கோட்பாடுகளையும் நடைமுறைகளையும் இவர் 'அறம்' என்று ஒப்புவதில்லை. ஆரியவியலின்படி அறம் என்பது 'தர்மம்'. 'தர்மம்' என்பது 'குலவொழுக்கம்', அல்லது மதவொழுக்கம்; அல்லது மதக்கடமை அல்லது ஆரியப் பார்ப்பன நன்மை நெறிகள்.

கீழ் வரும் சில எடுத்துக் காட்டுகளைக் காண்க.

“மனுவால் எந்த வருணத்தார்க்கு என்ன ‘தர்மம்’ விதிக்கப்பட்டதோ, அதுவே வேத சம்மதமாகும்.”

- மனு தர்மம்: 27.

“சூத்திரர்களின் தர்மம் என்னவென்றால் பிராமணர்களுக்குப் பணிவிடை செய்வதும், அவர்களுக்கு அடிமையாய் இருப்பதுமே”

- மனு தர்மம்: 1 - 31.

இவை போலும் குலவொழுக்கக் கோட்பாடுகளே ஆரியதர்மக் கோட்பாடுகளாகும். பொதுவாகக் கூறுமிடத்து ஆரிய தர்மம் என்பது அவர்களுடைய நன்மையும், வாழ்வும் நோக்கியே வகுக்கப்பெற்றுள்ளது. தமிழியல் அறம் என்பது உலக மாந்தர்க்கே பொதுவானது. இங்கு மேலும் சில மனுதர்மக் கருத்துகளைக் கவனியுங்கள்.

“சூத்திரன் பிராமணனுடைய தொழிலைச் செய்தாலும் சூத்திரனேயாவான். பிராமணன் சூத்திரனுடைய தொழிலைச் செய்தாலும் பிராமணனேயாவான்.”

“சூத்திரன் எவ்வளவு திறமை உடையவானக இருந்தாலும் கண்டிப்பாய் அவனைப் பொருள் சேர்க்க விடக் கூடாது. சூத்திரனைப் பொருள் சேர்க்க விட்டால், அது பிராமணனுக்கு ஆபத்தாக முடியும்”

- மனு 10 - 129.

“பிராமணன் உண்டு மிகுந்த எச்சில் ஆகாரமும், உடுத்திக் கிழிந்த கந்தல் ஆடையும், கெட்டுப்போன தானியமுமே சூத்திரனுடைய வாழ்க்கைக்குக் கொடுக்கப்பட வேண்டும்”

- மனு 10 - 25.

“பிராமணர் இழிதொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூஜிக்கத் தக்கவர்கள்.”

- மனு:9 - 313.

“பிராமணன் மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம்”

- மனு:9 - 317.