பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

௭௯


'அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லாமை, அறம்' (755)

'ஆற்றுவார் ஆற்றல் இகழாது போற்றுதல் அறம்' (891)

- என்றும் பல படியாக அறத்தின் கூறுகளை ஆங்காங்கே நூல் நெடுகலும் உணர்த்திச் செல்வார், ஆசிரியர்,

இவையெல்லாம் பொதுமை உணர்வுகளே; பொதுநல ஒழுகாலாறுகளே. 'அறம் என்பது குமுகாய ஒழுங்குமுறை அமைப்பு (Social order) என்பார், 'திருக்குறள் உண்மைப்பொருள்' நூலாசிரியர், கு.ச. ஆனந்தன். ஆனால் குமுகாய ஒழுங்கு முறை அமைப்பு - நாமாக அமைத்துக் கொள்ளும் அமைப்பு அன்று. மாந்த உணர்வின் படிநிலை வளர்ச்சியால் வடிவமுற்ற இயற்கை அமைவு ஆகும். என்னை? கல்லும், முள்ளும், கரம்பும் புதரும், காடும் மேடும், மலையும் மடுவுமாய்க் கிடந்த நிலத்தில், வழி தெரியாமல், தள்ளாடித் தள்ளாடிக், கல்லை விலக்கி, முள்ளை நீக்கிக் கரம்பின் விலகிக் காட்டின் நிலை தெரிந்து, மலையைச் சுற்றி, மடுவின் இறங்கிக் காலூன்றி நடந்த மாந்தன், காலப்போக்கில் ஒரு பாதையை அமைத்துக்கொண்டானே - அந்தப் பாதையைப் போன்றதே அறம் என்னும் மன உணர்வும் என்க. மேலும் அந்தப் பாதையை அமைத்துக்கொண்ட பாதை என்று கூறாது, அமைந்த பாதை என்று கூறுவதே மிகவும் பொருந்துவதாகும் என்க.

இனி, அது, திருவள்ளுவர்க்கோ, அல்லது தமிழர்க்கோ மட்டுமே சொந்தமான உணர்வு அன்று. மாந்தவினமே உற்றுணர்ந்து அறிய வேண்டிய, தெளிய வேண்டிய இயற்கை உணர்வாகும். விலங்குத் தன்மையினின்று மேலேறிய மாந்தன், அதனினும்மேலான உயிருணர்வுக்குத் தேவை என்று கண்டு கொண்ட ஒர் ஒப்புரவுணர்வாகும். விலங்குகளிடம் இதைப் புகுத்த முடியாது; புகட்டவும் முடியாது. அதேபோல, மாந்தர்களால் இதைத் தள்ளவும் முடியாது; தவிர்க்கவும் முடியாது. மொத்தத்தில் நீர்த்தேக்கத்திற்கு இயற்கையாய் அமைந்த கரை போல, மாந்த நிலைப்பாட்டிற்கு இயற்கையாக அமைந்த பொதுமை உணர்வே, அறம் என்க. இந்த உணர்வை வளர்த்தெடுக்க வேண்டியதும், நிலைப்படுத்திக் கொள்ள வேண்டியதுமான முயற்சிகளை செயல்களைச் செய்பவர்களே. திருவள்ளுவர் போலும் மெய்ப்பொருளாசிரியர்கள் ஆவர்; அத்தகு முயற்சிகளே திருக்குறள் போலும் நூல்கள் ஆகும், என்க. இதில் தமிழ் மொழிக்கும் தமிழினத்திற்கும் உள்ள சிறப்பும் பெருமையும் என்னவென்றால், இது மிகுதொன்மை முன்மையினமான தமிழினத்துள்தான், முன்தோன்றி மூத்த இனநலமாக மலர்ச்சி பெற்றிருந்தது என்பதே.

இனி, உலகின் பிற மதவியலார் ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு நூல் திருமறை நூலாக இருப்பது போலவே, உலகப் பொதுமையாகவும், அறத்