பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



திருக்குறள் மெய்ப்பொருளுரை பெருஞ்சித்திரனார்

கூரு


பொருளீட்டத்திற்கெனப் புறநிலைக்கு வந்து, அரசொடும், குடியொடும், நட்பொடும் புழங்குநிலை கொள்ளுங்கால், கடைப்பிடித்தொழுகும் கடமையும் பெருமையும் சான்றது. எனவேதான், ஆணுக்குரிய கற்புநிலை, பொருட்பாலில், குடியியலில், மானம் அதிகாரத்திற்குப் பின்னும், சான்றாண்மை, பண்புடைமை அதிகாரங்களுக்கு முன்னும், பெருமை அதிகாரத்துள் வைக்கப்பெற்றுப் பேசப்பெறுகிறது. மானவுணர்வு கெட்டால், ஆணுக்கு ஒழுக்கவுணர்வு நெகிழ்வுகொள்ளும் என்பதை நினைவுகூரவும், அது, தன் சான்றாண்மைக்கும் பெருமைக்கும் இழுக்கு என்பதை உணர்த்தவும், அந்நிலை பெரும்பாலான ஆண்களுக்கு நேருங்கால், அக்குடிமையே கெடும் என்று எச்சரிக்கவுமே, அவ்விடத்தில் எடுத்துக் கூறப்பெற்றது. பெண் கற்பு அகநிலை என்றால், ஆண் கற்பு புறநிலை என்றும், பெண்கற்பு குடும்பத்திற்குப் பெருமையும் (52), இல்லறத்திற்கு ஏற்றமும் (53), கணவனுக்குத் தலைநிமிர்வும் (59) தருவதென்றால், ஆண் கற்பு, குடிமைக்குப் பெருமையும் (இயல்), அவனுக்குத் தன்மான ('மானம்'- அதிகாரம் 97) உணர்வையும், பிறர் மதிக்கத் தக்க, பின்பற்றத்தக்க சால்பையும் ('சான்றாண்மை' அதிகாரம்-99) பெற்றுத்தருகிறது.

இவையன்றிப், பெண் கற்புக்கும் ஆண் கற்புக்கும் உள்ள இன்னொரு நுட்பமான வேறுபாட்டையும் இங்கு ஆசிரியர் தெளிவுபடுத்திக் கூறுகிறார்.

அஃதென்னெனில்,

ஒரு பெண், தனது கற்பைத் தானும் காத்துக் கொள்ளல் வேண்டும்; அவளைச் சார்ந்தவர்களும் அதைக் காப்பதற்குத் துணை நிற்றல் வேண்டும். ஏனெனில், அவள் உளத்தாலும் உடலாலும் மென்மையானவள்; (உள்ளத்தால் அன்பும் தாய்மையும் மென்மையானவை; உடலால் பெண்மையும், உறுப்பாண்மையும் மென்மையானவை - என்று ஓர்ந்து உணர்க.) எனினும், மற்றவர் காக்கும் காப்பைவிடத்தான் காத்துக்கொள்ளும் காப்பே சிறந்தது என்பதை உணர்தல் வேண்டும். (57), என்பது.

ஆனால், ஒர் ஆண், தன்னுடைய கற்புணர்வைத் தானேதான் காத்துக்கொள்ள முடியும் மற்று, அவனுக்கு வாய்க்கும் பிற சூழல்களெல்லாம் அவன் தன்னொழுக்கத்திற்கு இழுக்குச் சேர்ப்பவையே! (என்னை? அவன் இல்லத்தினின்று வெளியே தனித்து இயங்குவது; அவனது நட்பு - அது தீ நட்பாகவும், கூடா நட்பாகவும் இருக்கலாம். அவன் ஒரு பெண் விருப்பனாக இருந்தால்-'வரைவின் மகளிர்'பால் அவன் உள்ளம் ஈர்த்துச் செல்லக்கூடும். (நட்பியலில், பெண்வழிச் சேறல், வரைவின் மகளிர் அதிகாரங்களை எண்ணுக.) எனவே, இவ்வறமல்லாத தீநெறிகளிலிருந்து அவனை அவனேதான் காத்துக்கொள்ளல் வேண்டும். இதனாலேயே பெருமையும் தன்னைத்தான் காத்து ஒழுகின் உண்டு' (974) என்பார், ஆசிரியர் - என்க.