பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

97

அ - 1 -2 - வான்சிறப்பு -2

கசு. தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்

வானம் வழங்கா தெனின். 鹤

பொருள் கோள் முறை :

வானம் வியனுலகம் வழங்காது எனில் தானம், தவம் இரண்டும் தங்கா.

பொழிப்புரை வானம் (தன்னிடமிருந்து வந்து தங்கும் மழை மேகங்களைத் தன் இயங்கியல் முறைப்படி குளிர்வித்து, சுழற்சியானும், உயிர்த்தோற்ற நிலைப்பானும் மற்றும் பற்பல வகையானும், சிறப்புற்று விளங்கும்) வியத்தகு பெருமைக்குரிய இவ்வுலகத்திற்கு, மழையாக வழங்காமற் போமாயின், (பிறர் நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய வகையில் ஒருவர் நல்குகின்ற கொடையும், தன் நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் உரிய வகையில் தன்னை முறைப்படுத்திக் கொள்கின்ற, அறிவு, உள்ளம், உடல் முயற்சிகளாகிய) தவம் என்னும் நோன்மையும் ஆகிய இரு செயற்பாடுகளும் நிலைபெறா. (படிப்படியாய் இல்லாமற் போய்விடும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1.

வானம் வழங்காது எனின் என்பது, வானம் மழையை வழங்காதாயின் என்று பொருள்படும். வழங்குவது மேகவுருவில் நீராவியாக வந்து தன்னிடம் தங்குவதைக் காற்றால் குளிர்வித்து மழையாக்கித் தருவது. வானிடத்திலிருந்து பொழிவதை வானம் வழங்குவது என்றார். வானம் இடவாகு பொருளாய் மழையைக் குறிப்பதினும் இடப் பொருளாய் நிற்பதே சிறப்பு என்க. தங்குதல் : நிலை பெறுதல் தங்கா - நிலை பெறா. இல்லாமற் போதல்.

வியனுலகம் : வியத்தகு உலகம், அகலப் பொருளினும் வியப்புப் பொருளே பொருத்தமுடைத்து அது, பலவகை இயங்கியல் நிலைகளுக்கு, உரியதாகலின், அவற்றுள்ளும் சுழற்சியும், உயிர்த்தோற்றமும் வியப்பினும் வியப்பாம். தானம் : கொடை (தா வென்னும் வேரடியாகப் பிறந்த தூய தமிழ்ச் சொல்). பிறர் நலனுக்கும் மகிழ்ச்சிக்கும் பயனுறுத்துவதைக் கொடுத்தல். நலன் உடல் சார்ந்தது. மகிழ்ச்சி உளஞ்சார்ந்தது. தானம் பிறர்க்கும் தனக்கும் நன்மையும் மகிழ்ச்சியும் தரும் நிகரமை உணர்வு. தானம், தருமம், கொடை, ஈகை நான்கும் தூய தமிழ்ச் சொற்கள்.