பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

114


5. ஆற்றலுக்குச் சாலும் கரி - நூறு அசுவமேத யாகங்கள் செய்கின்ற ஆற்றலுக்கு, இந்திரன் இங்குச் சான்றாகக் கூறப்பெற்றான் என்க.

மேலும், இதில் இந்திரனது ஆற்றலைக் குறித்தாரேயன்றி, அவனை இழிவுபடுத்தும் கதைக் குறிப்பிருப்பதாகத் தெரியவில்லை. அவ்வாறிருப்பின் இந்திரனை அகல் விசும்புளார் கோமான் எனச் சிறப்பித்திரார்.

தொன்மக் கதைகளின்படி அல்லது கற்பனை நம்பிக்கைகளின்படி, ஐந்தவித்த பெருமைக்குரியவன் அவனாகவும் கொள்ள இடமில்லை. இந்திரனுக்குப் பலவகை ஐம்புலத் துய்ப்புகள் இந்திரவுலகத்தில் உளவாகவே கதைகள் கூறுகின்றன. இந்நிலையில் அவன் ஐந்தவித்த நிலையினன் என்பது எவ்வாறு பொருந்தும்?

அத்துடன் ஈண்டுத் தன்பதம் நோக்கித் தவம் செய்யும் நீத்தார் மாட்டுத் திலோத்தமை முதலிய தெய்வ மகளிரை விடுத்து, மற்று அத்தவம் அழித்துத் தன் தவம் அழியாமை நிலை நிற்கையானும், தனது பதம் விரும்பாமையானும் தானே சான்றாக அமையும் என்னும் காலிங்கர் விளக்கமும் கற்பனை மேல் அமைந்த கற்பனையே.

இனி, சமணரின், சாக்கியரின் பாண்டு கம்பளி நடுக்கக் கதையும் இதற்குப் பொருந்துமாறில்லை. கம்பளி நடுக்கத்தால் அவன் அஞ்சுவதாகக் கூறுவது அவன் அறிவுக்கும் தவ வலிமைக்கும் பழுது சாற்றுவதே!

மேலும், இத்தகைய அடிவலுவற்ற ஒரு தொல் கதைக்கு ஐந்தவித்தான் ஆற்றலைப் பொருத்திக் கூறியதாகக் கொள்வது நூலாசிரியரின் மெய்யறிவுக்கு இழுக்கையே சாற்றுவதாகும். அத்துடன் ஒரு தொன்ம (புராணக் கதையின் அடிப்படையில் நீத்தார்க்குப் பெருமை தரும் இக்குறளை எழுதியிருப்பார் என்று கருதுவதற்கும் இடமில்லை.

இவையெல்லாம் தவிர்த்து, எஞ்சியுள்ள மேரு மந்திரக் கதையினும் இந்திரன் கரியாவதற்கு வாய்ப்பில்லை. இவ்வாற்றலுக்கு உலகியல் சான்றாக எவரையும் கூறாது, தேவியல் சான்றாக இந்திரனைக் கரி கூறியது, மக்களிடத்து நன்கு பரப்பப்பெற்று அறிமுகம் ஆகிய ஒரு கதையே, ஆற்றல் கருத்தை நன்கு புலப்படுத்தும் என்று ஆசிரியர் கருதியதால் என்க.

இது, வடையும் காக்கையும் ஆடும் ஓநாயும், நரியும் கொடி முந்திரியும், அரிமாவும் நான்கு எருதுகளும், விறகு வெட்டியும் மூன்று கோடரிகளும் முதலிய கதைகளை எடுத்துக்காட்டாகக் கூறுதல் போல், ஆசிரியர் இவ்விந்திரனை உவமை கூறியதும் என்க.

எனினும் ஆசிரியர் இந்திரனைக் கூறியது பொருந்துவதன்று என்க.