பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

அ-அறத்துப்பால்-முன்னுரை


ஆரியர் வருகைக்குச் சில்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றி விளங்கியிருந்த அறம் எனும் மிக்குயர்ந்த பண்பியல் கூறின் அடிப்படையில்தான், தமிழரின் மேலோங்கி நின்ற கலைப்பண்பும், நடை நாகரிகமும் படிநிலை வளர்ச்சி பெற்று முழுமை அடைந்திருந்தன.

பொருள் என்பது அவரின் அறிவியல் கூறாகவும், அறம் என்பது பழந்தமிழரின் மனவியல் கூறாகவும், இன்பம் என்பது அவரின் உடலுனர் வியல் கூறாகவும், செழித்துக் கொழித்து, அவர் வாழ்வையே உயிரியலின் மீமிசை மாந்த மலர்ச்சியாக நிலைநிறுத்தியிருந்தன.

அறம் என்பது மனத்தின் அத்தனை நல்லுணர்வுகளுக்கும் அடிப்படையாய் விளங்கி நின்று, ஒருவரின் அன்புக்கும் பண்புக்கும் ஊற்றமாய், உருவமாய் இலங்கியிருந்து மாந்தவியலின் பொதுமை வளர்ச் சிக்கே இலக்காய், குறிக்கோளாய், வாழ்வியல் கோட்பாட்டை நிறைவு செய்யும் மூலகமாய்ப் படிந்து தேங்கி உரம் பெற்றிருந்தது.

இதனால், தொடக்கமும், முடிவும் தெரியாத உலகின் மாந்தவியக்கத் திற்குப் பொருள் விளங்கியது.

மொத்தத்தில் தமிழரின் வாழ்வியல் முழுவதும் அறமாகவே மலர்ச் சியுற்றிருந்தது என்பது மிகையான கூற்றன்று. அதே போல், பொருளியல் என்பது, அவ்வறவியலின் வழிப்பட்ட, வாழ்க்கையின் பொதுவியல் கூறுகளாகிய குமுகவியல், ஆட்சியியல், பொருள் செயலியல், பொருள் பயன்பாட்டியல், உலக ஒப்புரவியல், குடியியல், தொழில் முறையியல், மக்கள் அளவளாவியல், மக்கள் முரண்பாட்டியல், உடன்பாட்டியல் முதலிய நாட்டியல் கூறுகளை விளக்கமாகவும் விரிவாகவும் மாந்தச் செயற்பாடுகளை ஊடுருவிக் கண்டுகாட்டிய உலகியல் வழித்தடமாக

இனி, அஃதொப்பவே, தனிமாந்தப் பிரிவான ஆண், பெண் எனும் படைப்பியல் உயிராக்க உணர்வுகளடங்கிய இன்பியல் தன்மைகளையும் நுண்ணியதாகக் கண்டுணர்ந்து, அவற்றின் செவ்விய ஈடுபாடுகளையும் உடலியல்நுட்பங்களையும் விளக்கி நின்றது.

இவ்விவ்வாறு, மாந்தத் தொகுதியின் உயிரியக்கக் கூறுகளாகிய மனவியல்வாழ்க்கை அறிவியல் வாழ்க்கை, உடலியல் வாழ்க்கை என்னும் மூவகை இயக்கங்களையும் வரையறுத்து, அவற்றை அறம், பொருள், இன்பம் எனப் பகுத்துக் காட்டி, மக்களை இயங்கச் செய்த பெருமையும் அருமையும் தமிழினத்தையே சார்ந்தனவும், தமிழினத்திற்கே உரிமையுடையனவும் ஆகும் என்க.