பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

அ - 2 -2 - வாழ்க்கைத் துணைநலம் - 6




அ-2 இல்லறவியல்
அ-2-2 வாழ்க்கைத் துணைநலம் - 6
அதிகார முன்னுரை :

இல்வாழ்க்கையின் புறக்கூறாக, அதன் பொதுவாகிய தன்மைகளையும் நன்மைகளையும் முன் அதிகாரத்துள் விளக்கியவர், அதன் அகக்கூறாகியதும், இல்வாழ்க்கைக்கே இன்றியமையாத உறுப்பாக இருப்பதுமாகிய இல்வாழ்க்கைத் துணை என்னும் இல்லறத் தலைவிக்கு இருக்க வேண்டிய மன நலன்களையும், செயல் திறன்களையும், அவளின் தனிச்சிறப்பு நிலைகளையும் இவ்வதிகாரத்துள் விளக்கிக் கூறுவார்.

இஃது, இல்வாழ்க்கை அமைத்துக் கொள்வான் ஒருவன், அவ்வாறு எண்ணந் துணிந்தபின் செய்ய வேண்டிய முயற்சிகளுள் முதலாவது சிந்திக்க வேண்டியதும், செய்ய வேண்டியதும், தான் துணையாக்கிக் கொள்ளப்புகும் ஒரு பெண்ணுக்கு இருக்க வேண்டிய இயற்கை மனவுணர்வுகள், செயலுணர்வுகள் இவை எனத் தெரிந்துகொள்ள வேண்டியதும் ஆகையால், அவ்வதிகாரத்தின் பின் இதை வைத்தார்.

இதனுள், ஒரு பெண்ணாகி நிற்கும் பொதுவான ஒருத்திக்கும், அவள் இன்னோர் ஆணாகி நிற்கும் ஒருவனுக்கு இல்வாழ்க்கைத் துணையாகி, மனைவி, இல்லாள் எனும் பெயர்கொண்டு நிற்கும் சிறப்பு நிலைக்குமாகிய வேறுபாடுகளும், விளக்கங்களும் மிகச் சுருக்கமாகவும் அதே பொழுது மிக ஆழமாகவும் கூறப்பெறுகின்றன.