பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

191

அ - 2 -2 -வாழ்க்கைத் துணைநலம் - 6


ஒருத்தி இல்லாள், மனைவி என்றாகிய பின் பொது நிலையில் அவள் ஒரு பெண்தான் எனினும், தனி நிலையில் அவள் ஒரு பெண் அல்லள், மனைவியே! மனைவி என்ற பின் பெண்ணுக்குரிய தனித்தன்மையை அவள் இழந்து நிற்கிறாள் என்க. அதே போல், ஒருவன் ஒருத்திக்குக் கொழுநன், கணவன் என்றாகிய பின், பொதுநிலையில் அவன் ஓர் ஆண்தான் எனினும், தனிநிலையில் அவன் ஓர் ஆண் அல்லன், கணவனே! கணவன் என்றாகிய பின், ஆணுக்குரிய தனித்தன்மையை அவன் இழந்து நிற்கிறான் என்க.

இந்நிலையில் எல்லாம் ஒரு தெளிவு ஏற்படின், ஒருவர்க்கு ஒருவர் அடிமை என்பதும் இல்லை; ஒருவர்க்கு ஒருவர் ஆண்டை என்பதுமில்லை என்க. அவை மனமயக்கங்களே ஆகும் என்க, அல்லது அறிந்த திரிபுகளே ஆகும்

இனி, நூலாசிரியர் இல்வாழ்க்கைக்கு உரியளாகப் போகும் ஒருத்தியின் நலன்களை மட்டுமே சிந்தித்தவர், அதில் ஈடுபடும் - ஈடுபடப்போகும் ஒருவனது நலன்களைச் சிந்தியாமல் போனதென்னை என்பார்க்குக் கூறுதும்.

இல்வாழ்க்கை என்பது ஓர் ஆணை அடிப்படையாகக் கொண்டது அன்று; பெரும் பகுதியும் பெண்ணையே அடிப்படையாகக் கொண்டது என்க. ஓர் ஆண் என்பவன் இல்லத்தில் இருக்க வேண்டிய தேவையிலன். அவன் திண்ணை, தெரு, சத்திரம், சாவடி, காடு, மேடு எங்கும் படுத்துறங்கும் தன்மையினன். அவனது உடலும், மனமும், அறிவும் தனித்து இயங்கும் தன்மையுடையனவாய் இயற்கையாகவே அமைக்கப்பெற்றுள்ளன. அவனுக்கு இன்னோர் ஆணோ பெண்ணோ அவன் விரும்பினாலன்றி உறுதுணையாக இருக்கத் தேவையில்லை. அவன் தனித்தும் இயங்க முடியும்; கூட்டத்தோடும் இயங்க முடியும்.

ஆனால் ஒரு பெண் அவ்வாறிலள். அவள் ஓர் இல்லத்தில், ஓர் அடைவில் இருக்க வேண்டிய தேவையினள். அவள் ஓர் அடைவை, இல்லத்தைவிட்டு வெளியே நாளைப் போக்கும் நிலையினள் அல்லள். ஓர் ஆணைப் போல் திண்ணை, தெரு முதலிய விடங்களில் அவளால் தனித்து உறங்கவும் வாழவும், ஆண்கள் நிறைந்த இவ்வுலகில் வாய்ப்பில்லை, அவ்வாறு இயங்குவது இயலாது. ஏனெனில் அவள் உடலமைப்பு, உள்ள மலர்ச்சி, அறிவுவெளிப்பாடு ஆகியவை இயற்கையாகவே ஆணைக் கவரும் தன்மையில் அமைந்துள்ளன. அவள் தனித்திருப்பின் எந்த ஆணும் அவளை உரிமையாக்கிக்கொள்ள இயலும் என்க. இந்நிலையில் ஓர் ஆணின் கைக்கு அவள் அகப்பட்டால் அவள் பெண் தன்மையினின்றும் மாறி ஒரு தாய் ஆகிவிடுகிறாள். அக்கால் அவளுக்கு உதவி, பேணுதல், காத்தல், புரத்தல் தேவைப்படுகிறது. இத் தாயாகும் அவளின் தனித்தன்மைதான் அவளை