பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

192


ஓர் ஆணுக்குத் துணையாகவும், அவனை இவளுக்குக் காப்பாகவும் ஆகும் நிலைகளை உருவாக்குகிறது. இயற்கையே இத்தகைய வரம்புகளையும் வாய்ப்புகளையும் அமைத்து உயிரியங்கியல் நடைபெறும் நிலையை உருவாக்கியுள்ள பொழுது, மாந்தரால் அதை எவ்வாறு மாற்றியமைத்துவிட முடியும் என்பதை எண்ணிப்பார்க்க

எனவேதான் ஆண் கொழுவும் (கொம்பும்) பெண் கொடியும் ஆகின்றனர். கொழு (கொம்பு) தனித்து நிற்கலாம். கொடி தனித்து நிற்க வியலாது, என்க. அவளுக்கு அவன் ஒரு கொழுநனாகவும், அவனுக்கு இவள் ஒரு கொடியாகவுமே இருந்துதான் வாழ்வியற் கடைமைகளை நிறைவேற்ற வேண்டுமே தவிர, இந்நிலைகள் மாறியிருந்து அவை நிறைவேற்றப்படாவென்க. ஒருவேளை, அவ்வாறு, இயற்கை நிலைகளை மாந்தன் மாற்றியமைக்கும் பொழுது, உயிர்களின் இருப்பு நிலைகள் மாறுமே தவிர, உயிருடல் இயக்க நிலையில், அஃதாவது ஆண், பெண் என்னும் நிலையில் என்றுமே மாறுபாடு தோன்றாதென்க.

இவ்வுயிரியங்கியல் உண்மைகளை யெல்லாம் மெய்ப் பொருளாசிரியராகிய இந்நூலாசான், நன்குணர்ந்துதான் வாழ்க்கை இயங்கியலுக்கு ஒரு பெண்துணைதான் சிறப்புற அமையவேண்டுமே தவிர, ஆண் துணை அத்துணைச் சிறப்புற அமைய வேண்டும் என்பதிற் கவலை கொள்ளவில்லை. என்னை? ஒரு பெண் தனக்கமைந்த இயற்கையான உடலமைப்பு, உள்ளவுணர்வுகள், அறிவுச் சிந்தனைகள் ஆகிய இவற்றால், எத்தகைய சிறப்பற்ற ஆணையும் தனக்குற்ற சிறப்பான ஆடவனாக - கணவனாக ஆக்கிக் கொள்ளமுடியும் என்னும் ஆண் பெண் மெய்ப்பொருள் உண்மைகளை ஆசிரியர் நன்கு அறிந்துள்ளார் என்க. இவ்வுண்மையை இவ்வதிகாரத்துள்ள,

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

- என்னும் குறட்பாவிலும் நன்கு புலப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது.

இனி, இல்வாழ்க்கைக்கு இன்றியமையாத் தேவையாகிய இல்லாளுக்கு, மனைவிக்கு, இந்நூலாசிரியரால், தமிழியல் இலக்கிய வழக்கில், இவர் காலம்வரை இருந்திராத ஒரு புதுப்பெயராகவும், புதுமைப் பெயராகவும், ஒரு பொதுமைப் பெயராகவும் வாழ்க்கைத் துணை என்னும் இருபெயரொட்டுச் சொல் முதன் முதல் படைக்கப் பெற்று, இவ்வதிகாரத்துள் அதுவும் ஒரே ஒரு குறட்பாவில் மட்டுமே வழங்கப் பெறுவது ஒரு தனிச்சிறப்பாகும். இச்சொல்லை வேறு எங்கும் வேறு எவரும் ஆண்டிராத நிலையில், இவர் இதனைப் புதுவதாகக் கண்டு ஆண்டிருப்பது, பெண்மை, இல்லறத் தலைமையை ஏற்றுக்கொண்ட