பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

193

அ - 2 -2 -வாழ்க்கைத் துணைநலம் - 6


தன்மையைப் பெருமைப்படுத்துவதாகவும், ஆண், பெண் இருபாலாரும் இணைந்து நடத்தும் இல்வாழ்க்கைக்கு இருவரும் சமபங்களிப்பைச் செய்து, சமமதிப்புப் பெறவேண்டும் எனும் உயரிய பொதுமை நோக்கத்தைப் புலப்படுத்துவதாகவும் உள்ளது.

ஓர் ஆணுக்குத் துணையென்று அமையாமல் வாழ்க்கை(க்கு)த் துணை - என்றிருப்பதையும், அதன் முழுப்பெருமையையும், பொறுப்பையும் ஒரு பெண்ணுக்குத் தந்திருப்பதையும் உற்று நோக்குங்கால், ஒரு பெண்ணின்றி இல்வாழ்க்கை இல்லை என்பதும், அவளே ஒருவனது வாழ்க்கைச் சிறப்புக்கு அடிப்படையாகவும், பொறுப்பாகவும் இருக்கின்றாள் என்பதும் புலப்படுகின்றன.

நூலாசிரியர் காலத்துத் தமிழகத்துள் புகத்தலைப்பட்ட ஆரியவியல் நாகரிகத்துள் பெண்ணடிமை உணர்வு முதன்முதலாகத் தலையெடுத்து நின்றதையும், அதனைத் தமிழியல் அறிஞர்கள் கண்டித்து நின்றமையையும், அவர்களுள் நூலாசிரியர் தலைமையாக இருந்ததையும் வரலாறு கூறுவதைப் போலவே, இந்நூலும் கூறுவது கவனிக்கத் தக்கது. அதற்கு முழுச் சான்றாகி நிற்பன இவ்வதிகாரமும், அதன் தலைப்புமே ஆகும்.


ருக. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.

51

பொருள் கோள் முறை : இயல்பு


பொழிப்புரை : மனையறத்திற்குத் தக்க பெருமைக் குணங்களையும் செயல்களையும் இயல்பாகவே உடையவளாகித் தன்னை மனைவியாகக் கொண்டவனின் உடல், கல்வி, செல்வம், வருவாய் ஆகிய வளங்களுக்குத் தக்கபடி தன்னைத் தகவமைத்துக்கொள்ளத் தக்கவளே வாழ்க்கைக்குத் துணையாக இருக்கும் தகுதி உடையவள் ஆவாள்.

சில விளக்கக் குறிப்புகள்

1. மனைத்தக்க மாண்புடையள் இல்லறத்திற்குத் தகுதியான பெருமையுடைய குணங்களையும் செயல்களையும் இயற்கையாகவே அமையப் பெற்றவள்.