பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

அ - 2 -2 -வாழ்க்கைத் துணைநலம் - 6


புதிய இடத்திற்குத் தகுந்தாற்போல் தகவமைத்துக் கொள்ளும் தன்மையுடையவளாக இருத்தல் வேண்டும் என்பார்.

இந்நிலை கணவற்கும் வேண்டுவதே என்னும் கருத்தைத் தற்கொண்டான் என்னும் சொல்லால் புலப்படுத்தினார் என்க. என்னை? தற்கொண்டான் என்பது, தன்னை மனைவியாகக் கொண்டவன் என்று புறநிலையில் மட்டும் பொருள் படாது, தன்னை அன்பால் கொண்டவன், பண்பால், செயலால், ஒழுக்கத்தால், அறிவால் உரிமையும் உடைமையும் ஆக்கிக் கொண்டவன் என்று அகநிலையினும் பொருள்படும்படி உணர்த்துதலும் ஆகும் என்க.

பெண் ஒருத்தி தனக்குத் தக ஒத்துழைக்க வேண்டுமாயின் அவள் மன வெறுக்கையின்றி அன்புடன்பாடு கொண்டுதான் அவ்வாறு இயங்குதல் வேண்டுமன்றோ? அவளுக்குத் தக்கபடி அவனும் இயங்கும்பொழுதுதான், அவளும் அவனுக்கு ஒத்தியங்கல் இயலு மன்றோ? எனவே தன்னைக் கொண்டவன் என்கையில், தானும் அவ்வாறு கொளப்பட்டவள் என்னும் பொருளும் ஆங்கே அகப்பொருளாக நிற்றலை உணர்ந்து மகிழ்க.

அன்பு, பண்பு, மதிப்பு, ஒத்துழைப்பு என்னும் அகவுணர்வுகள் இருதலையும் ஒத்து இயங்குதலே இயற்கையாம் என்றுணர்க.

4. வாழ்க்கைத் துணை - இல்வாழ்க்கையில் அவளுக்கு அவன் போன்றே, அவனுக்கும் அவள் துணையாம் என்க.

இவ்வாறான சமநிலைப் பொருளை வருவிக்கத்தான் தமிழியல் வாழ்க்கையில் இதற்கு முன்னர் இல்லாத - புழங்காத-நிலையில் இச்சொல்லைப் புதுவதாகப் புனைந்து பயன்படுத்தினார் என்க.

பெண்மைக்குத் தந்த இச் சமநிலை உணர்வை நூால் முழுவதும் வரும் இன்னோரன்ன இடங்களிலும் காணலாம் என்க.

5. இஃது, இல்வாழ்க்கைக்குத் துணையாக அமையவரும் பெண்ணிற்கு இயற்கையாக இருக்க வேண்டிய மாட்சிமை (பெருமை)க் குணநலன்களையும், அவள் மணவாழ்க்கை தொடங்கியபின் அவள் மணந்து கொண்ட கணவனுக்கு ஏற்ற மனைவியாக அமையத் தன்னைமாற்றி (தகவு) அமைத்துக்கொள்ள வேண்டிய செயல்முறைகளையும் உணர்த்தியதாகும்.