பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

அ - 2 2 - வாழ்க்கைத் துணைநலம் - 6



பொழிப்புரை: இல்லறத்திற்குரிய அவள், (முன்பு கூறியவாறு, இயற்கைக் குணநலன்களும், தன்னைக் கணவனுக்குரிய வகையில் தகவுப்படுத்திக் கொள்ளும் செயல் திறன்களும் உடைய) பெருமைக்குரியவளாக இருப்பாளானால், அவளைக் கொண்ட இல்லற வாழ்க்கையில் இல்லாதது என்று சொல்லத்தக்கது எது? எதுவுமே இல்லை என்க. (இல்லாததும் இருப்பதைப் போலவே மனநிறைவைத் தருமாகையால்). ஆனால் அவள் அவ்வாறு பெருமைக்குரிய குணநலன்களும் செயல் திறன்களும் இல்லாத வகையில் பெருமையற்றவளாக இருந்தால், அவ்வில்லற வாழ்க்கையில் (அவர்களின் தேவைக்குரிய எல்லா வகையான வளங்களும் நிறைந்திருந்தாலும்) இருக்கிறது என்று சொல்லத்தக்கது எது? எதுவுமே இல்லை என்க. (இருக்கிறதும் இல்லாததைப் போலவே ஆகி, மனநிறைவைத் தராது ஆகையால்) .

சில விளக்கக் குறிப்புகள் :

1. ‘மாண்பு’ என்னும் பண்புப்பெயர், அஃது உடையவளுக்கு ஆகி நின்றது.

2.மாணாக்கடை - மாண் ஆகா இடத்து கடை - இடம், மாண் + ஆகா - மாணாகா. இறுதி உயிர்மெய் குறைந்து உயிரொடு நின்றது. மாண் + ஆ= மாணா ஆ எதிர்மறைப் பொருள் குறித்ததுமாகும்.

3.இல்வாழ்க்கையின் நிறைவு உள்ளத்தைப் பொறுத்ததே ஆகும்; உடைமைகளைப் பொறுத்ததாகாது என்றார். அவ்வுள்ள நிறைவும் இல்லாளைப் பொறுத்தே பெரும்பாலும் அமையும் என்னும் துட்பம் கூறினார் என்க.

4. இதில் இல்லவளை மட்டும் கூறி இல்லறத்தானைக் கூறாமற் போனது, அவன் மாண்பினும் இவள் மாண்பு அனைத்து நிலைகளினும் முகாமையும் மேலாந்தன்மையும் கருதியென்க. என்னை? இல்லறத்து வேர் போல் இல்லாள். இல்லறத்தான் அடிமரம் போன்றவன். அடிமரம் அரிப்புண்ணினும் வேர் அழுகாமலிருப்பின் மரமாகிய இல்லறம் காக்கப்பெறும் என்பது பற்றி என்க.