பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

214


என்னும் பால்குறிப்புச் சொற்கள் முன்னடையாகச் சேர்ந்து ஆண்மக்கள், பெண்மக்கள் என்று குறிக்கப் பெறும். பால் வேறுபாட்டின் ஒருமை குறிக்க இச்சொல்லின் பகுதியுடன் பாலிறுதி சேர்த்துமகன், மகள் என்று வழங்குதல் பெறும்.

குழவி, குழந்தை, மதலை, பிள்ளை, மகவு மக்கள், மகன், மகள், புதல்வர், புதல்வன், புதல்வி என்று தமிழில் பல சொற்கள் பிள்ளைகளைக் குறிப்பன.

தமிழிலக்கியங்களில் குறிப்பாகக் கழக இலக்கியங்களுள், பிள்ளைகளைக் குறிக்க மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்பெறும் சொல் மக்கள் என்பதுதான். மகன், மகள் என்னும் ஆட்சியும் மிகுதியே. ஆனால் மகவு என்னும் சொல் இல்லை.

புதல்வர், புதல்வன் ஆட்சி குறைவு. ஆனால் புதல்வி என்னும் சொல்லே கழக இலக்கியங்களுள் இல்லை.

பிள்ளை, பிள்ளைகள் என்னும் சொல்லாட்சி மிகவும் குறைவு. குழவி என்னும் சொல் மிகமிகக் குறைவு. குழந்தை என்னும் சொல்லும் கழக இலக்கியங்களுள் ஆளப்பெறவிலலை.

பரிமேலழகர் இவ் வதிகாரத்தைப் புதல்வரைப் பெறுதல் என்னும் தலைப்பிட்டு எழுதுகிறார்.

அவர், அவ்வாறு கொள்வதற்குக் கரணியம், புதல்வர் என்பது ஆண்பாற் சொல்லாகக் குறிக்கப்பெறுதலும், அவர்களே நீர்க் கடன், நீத்தார் கடன் இறுக்க வேண்டுமென நடைமுறை கூறப்பெற்றுள்ளதும் என்க.

மேலும், மக்கள் என்னும் பொதுப் பெயரையும்கூட, அறிவறிந்த என்று கூறுவதால், பெண் ஒழிந்து நின்ற பெயராகவே கருதுகிறார். ஏனெனில், பெண்ணை அறிவுடையவராக ஆரியவியலார் கருதுவதில்லை.

'நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும்,
பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே,
பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்'
தையல் சொற் கேளேல்

- என்று வருவனவெல்லாம் ஆரியவியல் கோட்பாட்டின் அடிப்படையில் வந்த கூற்றுகளே.

ஆரியவியல் கோட்பாட்டின்படி பெண், ஆணினும் மிகத் தாழ்ந்தவள் என்று பரிமேலழகர் கருதுகிறார். அதனாலேயே ஆண் குழந்தைகளை மட்டுமே குறிக்கும் பன்மையாகிய புதல்வர் என்னும் சொல்லையே மிகுதியும் பயன்படுத்துவார்.