பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

218


அறியப் புகும் உணர்வை, 'அறிந்த' என்னும் சொல்லால் குறித்தது உறுதிப்பாடும் சதுரப்பாடும் கொண்டு பெற்றோர் கருத வேண்டியதை வலியுறுத்தவே என்க.

இதில், பரிமேலழகர், பெண் பிறப்பைத் தாழ்வாகக் கருதும்படி உரை கூறுவது வருந்தத் தக்கதும், புறக்கணிக்கத் தக்கதும் என்க. ஆரியவியலின்படி அவர் கூறும் கூற்று இது:

"அறிவறிந்த" என்ற அதனான் 'மக்கள் என்னும் பெயர் பெண் ஒழிந்து நின்றது. இதனான் புதல்வர்ப் பேற்றினது சிறப்புக் கூறப்பட்டது" - என்பது.

இங்கு, பெண்கள் அறிவு அறியத் தக்கவரல்லர் என்றோ, அல்லது தகாதவர் என்றோ விளக்கம் கூறி, அதனால் ஆண் மக்களை (புதல்வரை)ப் பெறுவது சிறப்பு என்று நூலாசிரியர் கருதுவதாக, தம் ஆரிய வியலின் தாழ்வுணர்வை நூலாசிரியர்மேல் ஏற்றிக் கூறுவது, அவரைப் பழித்தலுக்கும், இழித்தலுக்கும் உள்ளாக்கும் கொடுமையும் குற்றமுமாம் என்க.

இதை, இவ்வறிவியலும், உரிமையியலும், சமவுடைமையியலும் வளர்ச்சி பெற்ற இக்காலத்தும், பாவாணர் போலியர், கண்டியாததும், கண்டும் காணாதது போலிருந்ததும் அக் குற்றத்திற்கு வழிவிட்டது போலாம் என்று வருந்துக -

3.யாமறிவதில்லை, அல்ல பிற : யாம் அறிந்த வரையில் வேறு எவையும் இல்லை.

இல்வாழ்வை அமைத்துக்கொண்ட இளைஞனும் இளைஞையும் தாம் பெற வேண்டுவனவாக முன்னர் வாழ்ந்து போனவர் தம் பட்டறிவாற் கூறிய பேறுகள் பலவற்றுள்ளும், மக்கட்பேறே சிறப்பு வாய்ந்ததென்பதை, யாமும் வாழ்ந்து அறிந்து கண்டு, அதையே உறுதிப்படுத்திக் கூறுகின்றோம். அதனினும் சிறந்த டேறு வேறு இல்லை என்று” என்பது ஆசிரியர் கூற்றாம் என்க.

பிறபேறுகள் அனைத்தும், தங்கள் வாழ்க்கை நலன்களுக்கு மட்டுமே பயன்படுபவை. ஆனால், அறிவறிந்த மக்களைப் பெறுதல், உலக இயக்கத்திற்கும் நலத்திற்கும் பயன்படுவதால், அஃது உயர்நத டேறு என்றார்.

-மேலும், பிற பேறுகளைப் பெறாவிடில் ஒரு தாழ்வும் இல்லை; குறையும் இல்லை என்பதும், ஆனால் ஒரு பெற்றோர் மக்களைப்-