பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

228


- இவை இவ்வாறாக இருக்க, நூலாசிரியர் இம் முச்சொல் வழக்குகளுக்கு என்ன பொருள்கள்தாம் கொண்டிருக்க முடியும் என்பதைப் பலவாறும் உய்த்துணர்கையில், அவர்,

எழுமை - என்பதற்கு எழுகின்ற பிறக்கின்ற பிறவிதோறும் என்றும்,

எழு பிறப்பு - என்பதற்கு ஒருவரைத் தொடர்ந்து வரும் ஏழு அஃதாவது சில அல்லது பல என்னும் குடும்பத் தலைமுறைகள் என்றும்,

எழுமை எழு பிறப்பு - என்பதற்கு, ஒருவர் தாம் எழுகின்ற பிறவிதோறும், அதே போல் அவரை அடுத்தடுத்துத் தோன்றுகின்ற சில அல்லது பல குடும்பத் தலைமுறைகள் தோறும் - என்றுமே பொருள்கள் கொள்ள முடியும் என்க. - எனவே, இவ்விடத்து, எழு பிறப்பு என்பதற்கு, நல் பண்புகளைச் செய்யும் பிள்ளைகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு, அவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்துத் தோன்றுகின்ற குடும்பப் பிறப்புத் தலைமுறைகள் பலவற்றுக்கும் என்றே பொருள் கொள்ள வேண்டுவதாயிற்று என்க. -

2. தீயவை தீண்டா : தீமை தரக்கூடிய பழியும் இகழ்ச்சியும் தரக்கூடிய தாக்கங்கள்; தீமைகள் என்னை ? ஒரு பெற்றோர் பண்புடை மக்களைப் பெறுவாரானால், அவர்களை அவர்கள் வாழும் வரையில், அவர்களைச் சார்ந்தவரோ, பிறரோ பழிப்பதோ இழிப்பதோ இகழ்ச்சி செய்வதோ நேர்வதில்லை. அவ்வாறு நேராதாயின், அதனால் வரும் தீமையான விளைவுகளும் அவர்களைச் சேர்வதில்லை. இனி, அவர்களை மட்டுமன்றி, அவரைத் தொடர்ந்து வரும் குடும்பத் தலைமுறைகள் சில அல்லது பலவற்றுக்கும் கூட, அதே வகையில், தீமைகள் அணுகுவதில்லை என்றார் என்க.

- இனி, தீமையான விளைவுகள் என்பன. அவர்தம்மேல் கூறப் பெறும், பழிச் சொற்களையும் இழி சொற்களையும், இகழ்வுரைகளையும் கேட்டுப் பிறர் அக்குடும்பத்துடனும், அதைச் சார்ந்தும் தொடர்ந்தும் வரும் பல குடும்பங்களுடனும் தொடர்பு கொள்ளவோ, அவர்களுக்கு உதவவோ, அல்லது மதிக்கவோ செய்யாமையால் வரும் பல்வகையான தீமைகள்.

- அவ்வாறான பழிப்பும் இழிப்பும் இகழ்வும் ஆகிய சொற்கள், ‘இவர்கள் கொலையாளிக் குடும்பத்தவர்கள், 'குடிகாரக்