பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

244


- இவ்வகையில், பரிமேலழகர் மட்டுமன்றிப் பாவாணர் வரை, இக்குறளுக்கு உரை கண்ட அனைவருமே, செம்மறியாட்டுக் கூட்டம் போல், இதே வகையிற்பொருள் கண்டிருப்பது, ஆரியவியல் கூற்றுகள், தமிழினத்தை எந்த அளவில் பிறப்பு முதல் இறப்புவரை மனத்தானும், அறிவானும், வாழ்வானும் தாக்கியிருக்கின்றன எனபதை உணர்த்துகின்றது.

- நோற்றல், நோன்பு, தவம் என்பன ஆரியவியலுக்கு மட்டுமே பொருந்துவன அல்ல தமிழியலுக்கும் பொருந்துவனவே. இன்னும் கூறுவதானால், இவ்வொழுகலாறுகள் தமிழியலினின்று தான் ஆரியவியலுக்குக் கொள்ளப்பெற்றன என்பதை இரு வரலாறுகளையும் தொடக்கமுதல் துல்லியமாக உணர்ந்தவர் அறிவர். ஆனால், பொதுவான மாந்த முயற்சிகளைக் கூட, தவமுயற்சியின் உள்ளடக்கிக்கூறி, ஆரியக் கோட்பாடுகளை, மாந்த வாழ்வியல் எங்கணும் ஊடிழைபோல் ஊடுருவ விட்டுத் தமிழியல் வாழ்வையே மூடநம்பிக்கைக்கு முழுமையும் அடிமைப்படுத்தி விட்ட அவற்றின் ஆழ அகலங்களையும். ஆணிவேர் சல்லிவேர்களையும் அறிந்து தெளியவே இம் மெய்ப்பொருளுரை உணர்தற்பாலது என்க.

3. இப்பாடலால், பெற்றோர்க்குப் பிள்ளைகள் செய்யும் நன்றிக்கடன்,உலகியல் அளவான் உணர்த்தப்பெற்றது என்க.