பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

249

அ - 2 - 4 - அன்புடைமை - 8


பொழிப்புரை என்றும் தங்கியிருக்கும் உயிர்க்கு எலும்பொடு (தசையும் நாரும் நரம்பும் அரத்தமும் கூடிய உடலொடு பொருந்திய தொடர்பு, அன்பொடு பொருந்தித் துய்த்த வழக்கம் என்று மெய்ம்மை அறிந்தவர் கூறுவர்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. பரிமேலழகர் முறை வைப்பில் 73ஆவது குறளாக வைக்கப் பெற்ற இது, இங்கு 72ஆவது குறளாக, கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெறுகிறது.

2. ஆருயிர்க்கு என்போடு இயைந்த தொடர்பு என்றும் தங்கியிருக்கும் உயிர்க்கு எலும்பினால் ஆய உடலொடு பொருந்திய தொடர்பு.

- ஆர் உயிர் - என்றும் தங்கியுள்ள உயிர் தோற்றமும் முடிவும் இல்லாமல் என்றும் தங்கியிருக்கும் உயிர்.

-இதனைப் பெறுதற்கரிய மக்கள் உயிர் எனலும் அருமையாக வாய்த்த உயிர் எனலும், பொருந்தா வென்க. என்னை? உயிர்க்குப் பெறுதற்கரியது மாந்தவுடலே தவிர, உயிரே பெறுதற்கரியது எனல் பொருளில்லாத கூற்றாகும். ஏனெனில், உயிர் நிலையானதே தவிர, உடல் நிலையானது அன்று, உடல்தான் அவ்வப் பொழுது உயிரால் பெறப்படுவது. பெறுவது உயிர்; பெறப்படுவது உடல். எனவே, 'பெறுதற்கரிய உயிர்' என்பதோ, 'அருமையாக வாய்த்த உயிர்' என்பதோ பொருந்தாக் கூற்றாகும். அது தவறும் ஆகும்.

- மெய்யறிவர் உயிர் நிலையானது; அவ்வப் பொழுது உடலுடன் விரும்பிக் கூடுவது, அவ்வாறு அது மாந்த உடலுடன் கூடுவது, அன்பைத் துய்ப்பதற்கே ஆகும் என்று கூறும் கூற்றை நூலாசிரியர் இங்கு உறுதிப்படுத்துவர்.

-'ஆர்' என்னும் முன்னடை தங்கிய என்று பொருள் தரும் அரிய சொல்லாகும். உயிரின் நிலைப்பாட்டை உணர்த்த இங்குப் பண்படையாக வந்தது.

- 'ஆருயிர் ' என்றாலே, தங்கிய உயிர், நிலையான உயிர், என்றும் ஆர்த்து நிற்கும் உயிர் என்றுதான் பொருள். அழகிய உயிர், அருமை உயிர்', 'பெறுதற்கரிய உயிர் என்றெல்லாம் பொருள் கோடல் மெய்யறிவடிப்படையில் மிகவும் பிழையாகும். உயிர் ஒர் ஆற்றல் கூறு ஆகையால், அழகிய, அருமை, அரிய பெறுதற்கரிய, என்றெல்லாம் பொருள் கொள்வது, உண்மையறியாதவரின் மயக்கக் கூற்றாகும். தீ, காற்று, நீர் என்னும் பூதப் பொருள்களுக்கே அவை