பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

254


எச அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. 74

பொருள் கோள் முறை :

அகத்து அன்பில்லா உயிர் வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரம் தளிர்த்து அற்று.

பொழிப்புரை உள்ளத்தே அன்புணர்வு இல்லாத உயிரினது உலகியல் வாழ்க்கை, வலிந்து இறுகிய திடர் நிலத்தின்கண்ணே நீர் வற்றிய மரம் தளிர்த்தது போல், மலர்ச்சி இல்லையாகிப் போகும்.

சில விளக்கக் குறிப்புகள்

1. பரிமேலழகர் முறை வைப்பில், 78ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, 74ஆவது குறளாக, கருத்து நிரல்நிறை கருதி வைக்கப் பெற்றுள்ளது.

2 அன்பகத்து இல்லா உயிர் வாழ்க்கை:

மனத்தில் அன்பு இல்லாத உயிரினது உலகியல் வாழ்க்கை ‘வாழ்க்கை என்றாலே உலகியல் வாழ்க்கை' என்று பொருள் தருமெனினும் உயிர் வாழ்க்கை என்று சிறப்பித்தலால், உயிர் உடலில் தங்கி வாழும் வாழ்க்கை என்றுதான் பொருள் கொள்ளுதல் வேண்டும்.

- உயிர்க்கு அனைத்து உணர்வு நிலைகளும் உண்டு என்பது மெய்யறிவு நூலாரது கொள்கை.

நூலாசிரியரும் மெய்யறிவினார் ஆகையான் நூலின் ஒவ்வொரு கருத்தையும் மெய்யறி வடிப்படையிலேயே, ஆனால், இயல்பியலுக்கும், உலகியலுக்கும், மாந்த வாழ்வியலுக்கும், உயிரியலுக்கும் பொருந்துமாறு கூறுவர்.

- ஈண்டும், உயிர்க்குள்ள இயல்பாய குணவுணர்வுகளுள், அன்புணர்வு சிறந்திருத்தலே, அதன் உடலொடும் கூடிய உலகியல் வாழ்க்கைக்கு மேலும், மலர்ச்சி ஏற்படுத்தும் என்றும் அல்லாக்கால் இல்லை என்றும் இப்பாடலின்கண் புலப்படுத்துகிறார்.

உறுதோறும் உயிர் தளிர்ப்பத் திண்டல் (10) - என்னும் குறளானும்,