பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

256


'சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் (267)
இளையர் இனமுறையர் (698)
ஒளியார்முன் ஒள்ளிய ராதல் (714)

- என்னும் குறள்களால் உய்த்துணர்விப்பார்.

3. வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த்து அற்று:

வன்மையுற்று இறுகிய திடர்நிலத்தின்கண்ணே நீர் வற்றிய மரம் தளிர்த்தது என்னும் நிகழ்வு இல்லாதது போல், மலர்ச்சி இல்லையாகிப் போகும் என்றார். வன்பால்கண் வன்மையுற்று இறுகிய நிலத்திடரின்கண்,

இது பாறை எனலும், பாலை எனலும் பொருந்தா. பாறை எனில் வன்மை தேவையின்று. மேலும் பாற் - பால் - பாலையைக் குறிக்காது; பாலையைக் குறிப்பினும் அது மணல் பொதித்த நிலமே யன்றி, இறுகிய நிலம் அன்று. எனவே வலிந்து இறுகிய திடர் நிலம் என்றே பொருள்படும்.

- வலிந்து இறுகிய திடர் நிலத்தின் கண்ணே புல்லும் முளையாது. எனவே, மரமும் இல்லை; அது வற்றலும் இல்லை; பின் தளிர்ப்பு இல்லை.

- எனவே, வானத்துக் குதிரைக்கு மூன்று கொம்பு என்பது போன்ற இல்பொருள் உவமையணி. - அன்பு உள்ளத்தே இல்லாத உயிரினது வாழ்க்கையில் தளிர்ப்பு - மலர்ச்சி என்பதற்கே இடணில்லை என்றார்.

- வலிந்து இறுகிய நிலத்தின் உள்ளே நீர் இல்லாததால், மரமும் இல்லை, தளிர்ப்பும் இல்லையாதல் போல், அகத்தில் அன்பில்லாததால், அங்குத் தளிர்ப்பும் இல்லை; மலர்ச்சியும் இல்லை என்றார்.

-இனி, அன்பு அகத்து இல்லா என்றதால் புறத்தே அன்பு இருப்பது போல் காட்டுதலையும் குறிப்புணர்த்தினார்.

- அன்பு, செலுத்துதற்கும், பெறுவதற்குமான இருவழித் தொடர்புடைய ஒரு பரிமாற்ற உயிருணர்வு.

- அஃது அகத்தின்மையால் பிறர்பால் செலுத்துதல் இல்லாமல், பிறரிடமிருந்து பெறுதற்காகப் புறத்தே இருப்பது போல் நடிப்பது தேவை என்றுணர்க.