பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

259

அ - 2 - 4 - அன்புடைமை 8


சில விளக்கக் குறிப்புகள்:

1.பரிமேலழகர் முறை வைப்பில், 74ஆவது குறளாக வைக்கப்பெற்றுள்ள இது, இங்கு 76ஆவது குறளாக, கருத்து நிரல்நிறை கருதி வைக்கப்பெற்றுள்ளது.

2.ஈனுதல்: உண்டாக்கிப் பெற்றுத் தருதல், உண்டாக்குதல்,

3.ஆர்வம்: விருப்ப எழுச்சி.

4.உடைமை : புறத்துச் செலுத்தும் உரிமை. இங்கு உடைய தன்மை.

5.நண்பு : நட்பு 'நள்' என்னும் வேரடியாகப் பிறந்த சொல். நள்ளுதல்- பொருந்துதல் இணைதல் - கூடுதல்.

6. நாடாச் சிறப்பு: பெறுதற்கரிய சிறப்பு நாடிப் பெற முடியாமல், தானாக மனவுணர்வினால் வந்து பொருந்தும் சிறப்பு உறவு செயற்கரிய (18) என்றும், உணர்வுதான் நட்பாங்கிழமை தரும் (78) என்றும் கூறுவார், இவரும்,

7。 ஆருயிரிடத்திலுள்ள அன்புணர்வுதான், ஏற்கனவே தனக்குப் பொருந்தியிருந்த உயிர்களிடத்துத் தொடர்பு கொள்ளும் ஆர்வத்தை உண்டாக்குகிறது; அந்த ஆர்வத்தின் அடிப்படையில்தான், அது தனக்கு அகத்தானும் புறத்தானும் உகந்த நட்புணர்வுள்ள உயிர்களை நாடிக் கண்டு பிடிக்கிறது என்க.

8. எய்தப்பெறும் சிறப்புகளுள் நட்பு என்பதும் ஒன்று என்றார்.

0
எஎ. என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
77

பொருள் கோள் முறை :

என்பு இலதனை வெயில் போல,
அன்பு இலதனை அறம் காயுமே.

பொழிப்புரை : எலும்பில்லாத வெறும் தசையுடலிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல், அன்பில்லாத வெறும் உடம்புயிர்களை அறவுணர்வு காய்ந்து வருத்தும்.