பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

271

அ - 2 - 4 - அன்புடைமை - 8


அன்பே துணையானது' என்றும், ஒருயிர் அல்லது ஒரு பொருள் மீது கொண்டுள்ள அன்பே, பிறிதோருயிர்க்குத் தீங்கிழைத்தற்குக் காரணமாதலால் அன்பே மறத்திற்கும் துணையென்றார் என்றும், உரையாசிரியர் பலரும் பலவாகப் பொருளுரைத்தனர், ஆயினும், அவர்கள் உரையெல்லாம் சுற்றியும் வளைத்தும், சுவரில் முட்டியதே. ஆகும்.

- மறம் என்பது கொடுமையற்ற வீரம், மனத்துணிவு, முனைப்புணர்வு, செந்துணிவு என்றுதான் பொருள்படும். ஆகலின், அது, தீயுணர்வோ, கரிசு (பாவ உணர்வோ, பகையுணர்வோ, பிறரை அழிக்கும் உணர்வோ அன்று. அது மக்கள் இயங்கியலுக்குத் தேவையான இன்றியமையாத - ஓர் உணர்வே என்க. மக்கள் தவிர்க்கக் கூடிய, வெறுக்கக் கூடிய உணர்வாக அதைக் கற்பனை செய்வதும், அதைவிலக்குவதற்கும், நீக்குவதற்கும் அன்பு தேவை என்பதாகப் பொருள்கொள்வதும், உலக இயங்கியல் உணராதவர் கூற்றாம் என்று கூறி விடுக்க

அதைப் 'பிணி போல்வது', 'பாவம் செய்வது', என்று கூறுவதெல்லாம் அடாதது.

ஒருவர் வாழ்தற்கு அறம் எந்த அளவு தேவையோ, அந்த அளவு மறமும் தேவை என்பதை உணர்த்துவதும், ஆனால் அன்பே அவையிரண்டிற்கும் ஒட்டியியங்கும் உணர்வாக அடிப்படை உணர்வாக இருத்தல்வேண்டும் என்பதையே இக் குறள்வழி ஆசிரியர்

- என்னை? 'அறத்திற்கும் அன்பு சார்பு என்பதைப் பலர் அறிந்திருப்பர்! ஆனால், மறத்திற்கும் அது துணையாதல் வேண்டுவதைப் பலர் அறியாதிருப்பர்; எனவே அஃது, உணரப்பெற வேண்டுவது என்பதே அவர் இதன்வழிக் கூறியது. என்க.

-இன்னும் இதனைக் கீழ்வரும் எடுத்துக் காட்டுகளால் விளக்கமாகக் காட்டுவாம்.

'அறம்' என்பது நம் கையிலுள்ள கனி' போல்வது; 'மறம்' என்பது இன்னொரு கையிலுள்ள கூரிய கத்தி போல்வது.

அறமாகிய கனியைப் பிறர்க்கும் பயன்படச்

செய்யவேண்டுமாயின், நமக்கு அன்புணர்வு இயல்பாக இருத்தல் வேண்டும்.