பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்

272


அதே போல், நம்மிடமுள்ள கத்தியை நம் பொருட்டாகவோ, பிறர் பொருட்டாகவோ, வன்மைக்காக அல்லாமல் நன்மைக்காகப் பயன்படுத்த வேண்டுமானாலும், அதற்கும் அணி புணர்வு அடிப்படையாக இருத்தல் வேண்டும் என்பதே இக்குறளின் கொள்பொருள் என்க.

நமக்கு மறம் வேண்டும்; ஆனால் மறத்திற்குத் துணையாக அன்பு வேண்டும். இதுவன்றி மறமே வேண்டாம் என்று இக்குறள் உரை தரவில்லை - என்க. -

அன்பில்லாதது வன்பு: அன்பில்லாமல் அறம் இயங்காது.

அதுபோல், மறம் இல்லாதது கோழைமை; அதுவும் அன்பில்லாமல் இயங்கக் கூடாது - என்றார்.

-'அன்பு' இல்லாமல் 'அறம்' இயங்காது என்பதால்தான், அறத்திற்குச் 'சார்பு என்றார்.

அதுபோல், 'அன்பு' இல்லாமல் மறமும் இயங்கக் கூடாது என்பதால்தான், அது மறத்திற்கும் துணை என்றார்.

'சார்பு' என்பது இயற்கையான தொடர்பைக் குறித்தது. அது முன்னரே இருப்பது.

துணை என்பது செயற்கைத் தொடர்பைக் குறித்தது. அஃது, உலக இயங்கியலுக்காக ஏற்படுத்திக் கொள்ளவேண்டுவது.

3. இஃது, அன்புடைமை உயிரியலுக்கும் உலக இயங்கியலுக்கும் தேவையாந் தன்மையை விளக்கிக் கூறியதாகும், என்க. o