பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

281 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9

விருந்தோம்புதல் - புதியவர்களையும், முன் பழகியிருந்தவர்களையும் வரவேற்றுப் பேணுதல்.

விருந்து அயர்தல் விருந்தினர் வருதலை விரும்புதல். விருந்தாட்டு, விருந்திடல் விருந்து படைத்தல், விருந்து அயிறல் - விருந்துண்ணுதல். விருந்து சொல்லுதல் - விருந்துக்கு அழைத்தல். விருந்து புறந்தருதல் - விருந்து பேணுதல் ஒம்புதல் - என்னும் பொருளிலும், விருந்தினரை ஏதாவது பேசிப்போகவிடல் அல்லது அவர் புறத்தே இருக்க, தாம் மட்டும் அகத்தே உண்ணுதல் என்னும் பொருளிலும் இருவகையாக வழங்கப் பெறுகிறது.

விருந்து வனப்பு - விருந்தை நல்லபடி ஓம்பிய மனநிறைவும் மகிழ்வும். இனி, விருந்து என்னும் சொல்லுக்கு விரும்புதல், ஆசைப்படுதல், அன்பு காட்டுதல் என்பனவும் பொருள்களாம்.

விரும்பு - விரும் என்னும் வேரடியாகப் பிறந்த சொல். ஆசை, அன்பு என்னும் பொருளது.

விரும்+பு விரும்பு 'பு பெயர்ச்சொல் ஈறு (அரும்பு, இரும்பு, கரும்பு, சுரும்பு முதலியன போல்) - . . .

விரும் +து விருந்து. புதிதாக வருபவர்மேல் அன்புகாட்டுதல், விரும்புதல், அவர்க்கு விரும்பிப் படைக்கும் சிறப்புணவு.

து பெயர்ச்சொல் ஈறு. (மருந்து, குருந்து, பருந்து, முருந்து (பறவை இறகினடி - முதலியவற்றுள் போல்) .

இனி விருந்தோம்பல் என்னும் பண்பாட்டு வழக்கம், பொதுநலவுணர்வின் முதல்படி, உலக உறவுக்கு எடுத்துவைக்கப் பெறும் முதல் அடி என்க.

இல்லறம் இதன் நாற்றங்கால் விளைவயல், மனச் செழுமைக்கும், உயிர் உறவாண்மைக்கும், உலக அறிவு விளக்கத்திற்கும் அடிப்படையாக உள்ள மாந்தநேய உறவு விருந்தோம்பலிலேயே தொடங்குகிறது.

கணவன், மனைவி, மக்கள், உற்றம், சுற்றம் என்று சுழன்று வந்த அன்புணர்வு இல்லத்தின் வாயிற்படி தாண்டித் தெருவிலிறங்கி, வந்து, வெளிவுலகப் பார்வைக்கு அடிவைக்கும் முன், மாந்தன் கொள்ள வேண்டிய முதல் பொதுவுணர்வு அஃதாவது அறம் விருந்தோம்பல். அவன் எதிர்கொள்ளும் முதலாவது பொதுமாந்தன் அஃதாவது உலக மாந்தன் விருந்தினன். விருந்தினன் வழியாகத்தான் இல்லற வாழ்வினன்