பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301 அ - 2 - 5 - விருந்தோம்பல் - 9

. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார். 38

பொருள் கோள் முறை :

விருந்து ஒம்பி வேள்வி தலைப்படாதார் பரிந்து ஓம்பிப் பற்று அற்றேம் என்பர்.

பொழிப்புரை விருந்தோம்புதல் செய்து வேளாண்மை அறத்தில் ஈடுபடாதவர்கள், தங்கள் செல்வத்தையும் பிற உடைமைகளையும் மிகவும் முயன்று பேணிக் காத்தல் செய்து, அவற்றைத் தாமே தமியராய் உண்டு உடுத்து உலாவிக் கழித்து, அதனால் பிற தொடர்பாளர்களையும் உற்றார் உறவினர்களையும் நண்பர்களையும் பெறுதற்கு இயலாமல் இழந்து, ஓர் ஆதரவும் இல்லாதவர்கள் ஆகி விட்டோமே எனப் பிற்காலத்து வருந்துவர்.

சில விளக்கக் குறிப்புகள் :

i பரிந்து ஓம்பி : தங்கள் செல்வத்தையும் பிற உடைமைகளையும் மிகவும்

முயன்று பேணிக் காத்தல் செய்து,

2 பற்று அற்றேம் என்பர் : ஒர் ஆதரவும் இல்லாமல் ஆகிவிட்டோமே

என வருந்துவர். வருந்துதல் இயல்பானது.

3. வேள்வி தலைப்படாதவர் : வேளாண்மை அறத்தில் ஈடுபடாதவர்கள்.

தலைப்படுதல் ஈடுபடுதல். -

4. இது, விருந்தோம்பல் முதலிய வேளாண்மை அறத்தில் ஈடுபடாதவர்கள், பிற்காலத்துத் தம் ஈட்டங்களை இழந்து தனிப்பட நின்று வருந்த வேண்டியிருக்கும் என்று கூறி எச்சரித்தது.

இது, முன்னைக் குறளுக்கு மறுதலை யானதால் அதன் பின்னர் வைக்கப்பெற்றது. O