பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

அ- அறிவியல்-முன்னுரை


முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து என்று கூறப் பெறுவதற்குப் பொருத் தமாயில்லை என்று உரையாசிரியர் பலரும் கருத்துக் கூறுவது ஒருவாறு ஏற்புடையதே. எனவேதான் அதற்கு இவ்வுரை.நூலில் அறமுதல் உணர்தல் என்று பெயரிடப் பெற்றுள்ளது. இது பற்றிய கரணியங்களை அவ்வதிகார முன்னுரையில் விளக்கமாகக் காட்டியிருக்கிறோம்.

இதன் இரண்டாவது அதிகாரம் வான்சிறப்பு என்பது.

'வான் சிறப்பு அதிகாரம் மழையினது தேவையையும், அதன் சிறப்பி யல்களையும் கூறுவதாக அமைந்திருப்பது, திருக்குறளின் கருத்தியலுக்குப் பொருந்துமாறில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால், அதனை அவ்வாறு எளிதாகக் கருதித் தள்ளிவிடவும் இயலாது. அதன் உள்ளுறையும் கருத்துகளும் திருவள்ளுவப் பேராசானால் கருதுமாறு போலவே அமைந்திருப்பதை ஊன்றிக் கவனித்து உணரலாகும்.

உலகின் உயிரியக்கத்திற்கு ஊன்று கோலாய் விளங்கித் தோன்றும் அறவுணர்வின் முதற்செயற்பாடு மழையின் வழியாகவே உணரவும் உணர்த்தவும்பெறும் என்பதை அறிவினார் ஊன்றி அறியலாம்.

எனவே அறமுதல் உணர்தல் என்னும் முதல் அதிகாரத்தை யொட் டியும் அதனை அடுத்தும் வான் சிறப்பு அதிகாரம் அமைந்திருப்பதும் மிகவும் பொருத்தமானதே! இவ்வாறு அதிகாரங்களும் உலக இயக்கத் திற்குரிய அடிப்படையான இயங்கியல், மெய்ப்பொருளியல் ஆற்றல்களை மக்களமைப்பிற்கு உணர்த்துவதற்காகவே அமைந்திருப்பனவாக உணரலாம்.

இனி, இவ்வியலின் மூன்றாவது அதிகாரமாக அமைந்திருப்பது, அல்லது அமைக்கப்பெற்றிருப்பது நீத்தார் பெருமை அதிகாரமாகும். இதுவும் அறவுணர்வின் பாற்பட்டு இயங்கும் மீமிசை மாந்தத் தன்மையை மக்கட்கு உணர்த்துவதாகும். இதனின் பொருத்தத்தையும் சிறப்பையும் கூட அவ்வதிகார முன்னுரையில் விளக்கியுள்ளோம்.

அடுத்து, இவ்வியலின் நான்காவதும் இறுதியானதுமாகிய அதிகாரம் அறன் வலியுறுத்தல் ஆகும். இதனது தேவையையும் பொருத்தத்தையும் சிறப்பையும்கூட அவ்வதிகார முன்னுரையில் நன்கு விளக்கப்படுத்தி யுள்ளோம்.

இனி, அறமுதல் உணர்தல், வான்சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல்' ஆகிய நான்கு அதிகாரங்களையும் கொண்ட இயலுக்கு ரு பெயர் சூட்டுவதாயின் அறவியல் என்னும் பெயரே மிகவும் பொருந் துவதாகும். நான்கு அதிகாரங்களும் அறத்தொடர்புடையன என்பதில் யாருக்கும் ஐயப்பாடு வரவேண்டியதில்லை.