பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை- பெருஞ்சித்திரனார்

23


இவ்வாறு இவ்வியலை அமைத்துக் கொள்வதானால் அறத்துப்பால் என்னும் பால்பகுப்பில், அறவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்னும் நான்கு இயல்கள் அடங்குவதாகக் கொள்ளலாம்.

'பாயிரவியல்' என்பதைவிட அறவியல் என்பதே இவ்வியலுக்கு மிகப் பொருத்தம் உடையது. பாயிரவியல் என்பது எவ்வகையிலும் பொருத் தமிலாத பெயராகும். பாயிரம் என்பதன் இலக்கணக் கூறுகளில் ஒன்றுகூட இந்நான்கு இயல்களில் இல்லையென்பது ஒன்று. பாயிரம் என்னும் சொல்லே தொல்காப்பியர் காலத்திலோ, திருவள்ளுவர் காலத் திலோ தோன்றியிருக்கவில்லை என்பதால் திருவள்ளுவரே இவ்வியலுக்கு இப்பெயரைச் சூட்டியிருக்க முடியாதென்பது, இரண்டு.

எனவே பாயிரவியல் என்று இதுகாறும் வழங்கிவந்த இவ்வியல், இந்நூலில் அறவியல் என்று புதுப்பெயர் கொண்டு வழங்கப்பெறுகிறது என்க. இப்பெயர்த்தகுதி நோக்கி, அறிஞர்கள் இனி, இப்பெயராலேயே இவ்வியலை வழங்கி வருவார்களாக

அறவியல்' என்பது இயற்கையாக நின்றியங்கும் ஒழுகியலுக்கு ஒத்த அமைப்பு விளக்கமாக அமைந்துள்ளதை அறிவினார் அறிந்து மகிழ்க