பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


கற்பனை என்பது என்ன?

பின்னை, கடவுள் அல்லது தெய்வ அல்லது இறைமை உணர்வு என்பதுதான் என்ன? ஏன் அது வேண்டும் என்றால், அது மனத்துக்குத் தேவையான, உள்ளுணர்வாக அமைந்த, ஒரு நம்பிக்கையுணர்வு சார்ந்த, ஒரு பற்றுக்கோடு என்பதுதான். அஃது ஒரு கற்பனையியல் கொள்பொருள் (Imaginary Theme) ஆகக்கூட இருக்கலாம். அதனால் அதைத் தேவையில்லை என்று கருதிவிடக் கூடாது.

கற்பனை என்பது என்ன? நம்மைவிட, நம் எண்ணங்களைவிட, நம் அறிவைவிட, உலகில் உள்ள பருப்பொருள்களும் நுண்பொருள்களும்கூட ஒருவகைக் கற்பனைதான் என்பதை முதலில் நாம் உணர்ந்துகொள்ளல் வேண்டும். கற்பனை, நம்பிக்கை இரண்டு உணர்வுகளும் ஒரு வகையில் ஒத்த உணர்வுகளே. கற்பனை விதையென்றால், நம்பிக்கை என்பது செடி நம் தாயும், தந்தையும் ஒரு நிலையில் நாம் கற்பித்துக் கொண்ட நம்பிக்கைப் பொருள்கள்தாம் ! அஃதாவது அவர்கள்தாம் நம் பிறவிக்குக் காரணமானவர்கள் என்பது நமக்குத் தெரியாது. நாம் பிறந்தவுடன் நம்மை அவர்களிடமிருந்து அப்புறப்படுத்தியிருப்பார்கள்ானால், நாம் அவர்கள்தாம் நம் தாய் தந்தையர் என்று, நம் அறிவு வளர்ந்த பின்னும்கூட, கண்டு பிடித்துவிட முடியாது. எனவே, அவர்கள்தாம் நம் தாய் தந்தையர் என்பது, அவர்கள் நம்மை வளர்த்து வந்ததிலிருந்து, பிறர் நம்மிடம் கூறி உறுதிப்படுத்தியதிலிருந்து, நாம் கற்பித்துக்கொண்ட அல்லது கற்பிக்கப்பெற்ற கருத்தாகும். அவர்களுக்கு நாம் பிறவாதிருந்து, பிறப்பித்த வேறு இருவர் அவர்களிடம் நம்மைக் கொடுத்து வளர்க்கப்பெற்றவர்களாக நாம் இருந்திருந்தாலும், அவர்களைத்தாமே நம் தாய் தந்தையராக நாம் கருதியிருப்போம். எனவே, வளர்த்ததாலோ, அதை நாம் கண்கூடாக உணர்ந்ததாலோ, பிறர் நமக்கு அவ்வாறு கூறியதாலோகூட நம் தாய் தந்தையராக அவர்கள் ஆகிவிடமுடியாது. இந்த வகையில் நாம் கற்பனை செய்துகொண்டோம், இவர்கள்தாம் நம் தாய் தந்தையராக இருக்க வேண்டும் என்று; அப்படியே பிறராலும் கற்பிக்கப்பெற்றோம், இவர்கள்தாம் நம் தாய்தந்தையரென்று. ஆனால், இவற்றால் மட்டுமே அஃது உண்மையாகிவிட முடியாது என்பதை நாம் முழுமையாக உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். பின் எப்படி அவர்கள் நம் தாய் தந்தையர் ஆனார்கள்? நாம் கற்பனை செய்து கொண்டோம்; அத்துடன் பிறராலும் கற்பிக்கப்பெற்றோம். அவற்றின் அடிப்படையில் நாம் நம்பினோம். இந்த நிலைகள்தாம் உண்மை. எனவே, கற்பனையும் அதை அடியொற்றிய நம்பிக்கையும்தாம் நமக்கு அப்பால், பிறர்க்கிடையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்கின்ற உணர்வை நமக்குத் தருகின்றன என்க