பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44

திருக்குறள் மெய்ப்பொருளுரை-பெருஞ்சித்திரனார்


மக்கள் கூட்டத்தில், உறவுக் கூட்டத்தில், குடும்பத்தில், குழுவில், குலத்தில், இனத்தில் ஒருவர்தாம் என்று நிறைவு பெறுகிறோம்.

இந்த நிறைவு நம் மனம், அறிவைப் புறக்கணித்துவிட்டுக்கூட நம்புகிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இந்த மனவுணர்வுதான் கடவுள் அல்லது இறை நம்பிக்கையிலும் செயல்படுகிறது. அது மக்கட்கு - நமக்குத் தேவை. அதனால், மனம் நிறைவு பெறுகிறது; நம்பிக்கை பெறுகிறது; துணிவு பெறுகிறது; ஊக்கம் பெறுகிறது; உழைக்க முற்படுகிறது; பிறருடன் உறவாட விரும்புகிறது. இந்த உள்முக நம்பிக்கையுணர்வு மனத்தில் இல்லாமல், அல்லது இருந்து குறைந்து மனம் வெறுமையுற்றால், மன வெறுக்கையினால், உயிர் இவ்வுலகக் கட்டுப்பாட்டினின்றும், உடற்கூட்டினின்றும் வெளியேறிவிட விரும்புகிறது. வெளியேறியும் விடுகிறது. தற்கொலைகள் இவ்வாறுதாம் நடைபெறுகின்றன.

முழுமையும் உண்மையோ

முழுமையும் பொய்யோ இல்லை!

இனி இன்னோர் உண்மையையும் நாம் இவ்விடத்தில் தெரிந்து கொள்ளல் வேண்டும். இறைமையையோ அல்லது கடவுள் தன்மையையோ, முழுமையும் உண்மையென்றோ, அல்லது முழுமையும் பொய்யென்றோ எவராலும் எக்காலத்தும் எக்காரணம் காட்டியும் மெய்ப்பிக்க முடியாது. எனவேதான், இந்த உணர்வு, உலக அறமாக, இயற்கையின் மூல ஒழுங்கியலாக இவ்வதிகாரத் தலைப்பு வழியாகவும், அதிகாரக் கருத்துகள் வழியாகவும் கூறப்பெற்று, ஒரு வகையில் மட்டுமன்று, பலவகையிலும் இது மக்கள் வாழ்வியலுக்கும் அதற்கடிப்படையான அறவியலுக்கும் தேவை என்று இதில் வலியுறுத்தப்பெறுகிறது என்க.

மனவுணர்வும் அறிவுணர்வும் உடலுணர்வும்:

மனம், அறிவு இரண்டும் தனித்தனியாகவும் இயங்குகின்றன; ஒன்றோடொன்று இணைந்தும் இயங்குகின்றன. ஒலி மட்டும் இயங்கும் வானொலிப் பெட்டியையும், ஒலியும் ஒளியும் சேர்ந்தியங்கும் தொலைக்காட்சிப் பெட்டியையும் நாம் கேட்டும் பார்த்தும் இருக்கிறோமே, அதுபோல, தொலைக்காட்சிப் பெட்டியிலும், ஒலிக் கருவியை நிறுத்தி விட்டால், ஒளி மட்டும் இயங்குவதை நாம் பார்க்கலாம்.

இவ்வாறு மனமும் அறிவும் சேர்ந்து இயங்கும் பொழுது, மனம் அறிவை அடிப்படையாகக் கொள்கிறது. அறிவு மனத்தை அடிப்படையாகக் கொள்கிறது. இந்த வகையில் ஒன்றுக்கொன்று உதவிக் கொள்கிறது. ஒன்றையொன்று தழுவிக் கொள்கிறது. மனம் வெறுப்படைந்தால் அல்லது அலைவுற்றால் அறிவு அதைத் தேற்றுகிறது.