பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

45


சென்றவிடத்தால் செலவிடாது தீது ஒரீஇ நன்றின்பால் உய்ப்பது அறிவு (422) என்றது காண்க. அறிவு தடுமாறினால் மனம் அதைத் தேற்றுகிறது. இரண்டுக்கும் ஒப்புதலான ஒன்றை இரண்டுமே துய்க்கின்றன; ஏற்றுக்கொள்கின்றன. இரண்டுக்கும் ஒப்புதலில்லாத ஒன்றை இரண்டும் துறந்து விடுகின்றன.

இவ்விடத்தில் உடலையும் நாம் இணை சேர்த்துக்கொள்ளுதல் வேண்டும். அதையும் மறந்துவிடக் கூடாது. மனமும் அறிவும் கதைத் தலைவியும் தலைவனும் போன்றவை யென்றால், உடல் இரண்டும் இணைந்து நடத்தும் நாடகத்திற்கு ஒரு மேடை, களம் போன்றது ஆகும். அல்லது அவையிரண்டின் வாழ்க்கைக்கு ஒரு வீடு போன்றது ஆகும். இந்த உடலென்னும் வீட்டில்தான் மனம் என்னும் தலைவியும், அறிவு என்னும் தலைவனும் வாழ்க்கை என்னும் குடும்பத்தை நடத்துகின்றனர். இருவரும் தொடக்கத்தில், அஃதாவது இளம் பருவத்திலிருந்து இளைமைப் பருவம்வரை ஒருவரை ஒருவர் விரும்பும் காதலர்கள் போல், வாழ்க்கை நடத்துகின்றனர். அப்பொழுது, அவர்களுக்குள் ஊடல் நடக்கிறது. பூசல் விளைகிறது. அவற்றாலெல்லாம் அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து விடாமல், ஒருவரை ஒருவர் நன்றாக விளங்கிக்கொள்ள முற்படுகின்றனர். பிறகு, இளைமைப்பருவம் வந்து ஒருவரை ஒருவர் நன்கு விளங்கிக் கொண்டு, மணந்து இணைந்துவிடுகின்றனர். பின்னர் இருவரது போக்கும் ஒருவரை ஒருவர் சரி செய்துகொண்டு போகும்படி, குடும்பத்தில் உள்ள கணவன் மனைவியரைப் போன்றே, ஒருவர்க்கொருவர் உறுதுணையாகவும், விட்டுக்கொடுத்தும் இயங்குகின்றனர். முதுமை அடைய அடைய இருவர்க்கும் ஊடல்களும், பூசல்களும் படிப்படியாகக் குறைந்து இறுதியில் அஃதாவது முதுமையில் இருவரும் ஒரே குறிக்கோளுடன் கொள்கை கோட்பாட்டுடன் இணைவாக இயங்குகின்றனர்.

இறையுணர்வு நிலைகள்:

இவ்வகையான மனம், அறிவு இணைவு வாழ்க்கையில், உயிரை நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வுயிரைத்தான் மெய்யறிவியலார் ஆதன், ஆன்மா (ஆத்மா) என்கின்றனர். இவ்வுயிர் மனத்திற்கும் அறிவுக்கும் தாய் போன்றது. அவ்வாறானால் அவ்விரண்டிற்கும், அஃதாவது, தாயாக உள்ள உயிர்க்கு ஆதனுக்கு - ஆன்மாவிற்குக் கணவனும் அஃதாவது தலைவனும், (பதியும்) இந்த மனம், அறிவு என்னும் குழந்தைகளுக்குத் தந்தையும் யார்? அவரைத்தான் இறைவன் என்கிறது. மெய்யியல். அவர்தான் பேராதன், பேரான்மா, பெத்தான்மா (பேராத்மா) பேரிறைவன் என்றெல்லாம் விளக்குகிறது. மெய்யறிவியல்,

இதில் எவ்வகைப் போராட்டத்திற்கும் இடம் இல்லை. உள்ளது எனலாம்; இல்லது எனலாம். இவ்வாறு எனலாம்; அவ்வாறு எனலாம்.