பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 2.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அ-1-1-அறமுதல் உணர்தல்-முன்னுரை

47


மெய்யறிவியலும் மதவியலும்:

எனவே, இவ்வாறான உணர்வு நிலைகளை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். விளங்கிக்கொண்டால்தான், இவ்வுலக வாழ்க்கையை நாம் செப்பமாகவும், மகிழ்ச்சியாகவும், நிறைவுடனும், நம்பிக்கையுடனும் நடத்திச் செல்ல முடியும் என்பது மெய்யறிவியலார் கொள்கை. இதை மதவியலார் வேறு வகையாகக் கற்பிப்பர். அந்த நிலைகளையெல்லாம் இந்த நூலுள் தேவையான இடங்களில் தேவையான அளவு விளக்கிச் செல்கிறார் நூலாசிரியர். அவற்றை ஆங்காங்குப் பார்ப்போம்.

இனி, இத்தகைய பேரிறைவனை வாழ்த்தி வணங்குவதில் என்ன தவறு: அஃது அவரவர் விருப்பம், அஃதாவது, அஃது அவரவர் மனத்தையும் அறிவையும் பொறுத்தது. அது தனித்தனி உணர்வு. அதை மெய்யறிவியல் பொதுவாக்கி வலியுறுத்துவதில்லை. அவ்வாறு அது பொதுவாக்கப்பெற்று எல்லார்க்கும் உற்ற கடமையாக்கப்பட்டுவிட்டால், அது மதமாகி விடும். அத்துய இறையுணர்வு அறவுணர்வாக மாற வேண்டும் என்பதுதான் மெய்யறிஞர் கோட்பாடு. அதுதான் அறம், மூல அறம், முதல் அறம். இறையுணர்வு அறவடிவின; அறத்தைத்தான் எல்லார்க்கும் பொதுவாக்க முடியும். மதத்தை அன்று. மதத்தை எல்லார்க்கும் பொதுவாக்க முடியாது. மதவுணர்வு தொடக்கத்தில் மாந்தர்க்கு உகந்தது போலிருந்து, படிப்படியாக வெறியுணர்வாகவும், பின் வல்லுணர்வாகவும் மாறி வந்து இறுதியில் கொடுமை உணர்வாகவும் கொலையுணர்வாகவும் மாறி விடும்; படிநிலை (பரிணாமம்) எய்தி விடும்.

மெய்யுணர்வு மனத்தையும் அறிவையும் அமைவுபடுத்துவது. மதவுணர்வு மனத்தையும் அறிவையும் அலைக்கழிப்பது. அஃது எந்த மதமாயினும் சரி. மதம் என்ற சொல்லுக்குத் தமிழில் இருபொருள்கள் உண்டு. ஒன்று கொள்கை என்ற பொருளைத் தரும். இன்னொன்று வெறி, உன்மத்தம் என்னும் பொருளைத் தரும். யானை மதம் பிடித்தது என்றால், அது கட்டுத்தறியை அறுத்துக்கொண்டு தாறுமாறாக ஓடி, எதிரிலுள்ள அனைத்தையும் மிதித்தும், அழித்தும் தூக்கி வீசியும் உயிருள்ளவர்களைக் கொன்று பேரழிவு செய்யும். அதைப் போன்றது மதம்.

மெய்யுணர்வு உள்ளத்தில் அறிவில் உயிரில் மட்டுமே கலந்து நிற்கும் ஓர் உணர்வு. அது மதவடிவம் கொள்ளுதல் கூடாது என்பது நூலாசிரியர் கொள்கை, - -

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்

பழித்தது ஒழித்து விடின் (280)

என்று மதப் புனைவுகளைக் கண்டித்து, மதத்தையும் கண்டிக்கிறார். இது துறவியலில், கூடாவொழுக்கம் என்னும் அதிகாரத்தில் கூறப்பெற்றதால்,