பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அ-2-9 அடக்கம் உடைமை 13


இறுதியில் கடுஞ்சிறையும் காக்க வேண்டி வரும் என்றார்.

- சொல்லிழுக்குப் படுதல்- இழிசொற்களுக்கும் பழிகூறலுக்கும் ஆளாதல்.

- பேச்சுக்குப் பேச்சும், ஏச்சுக்கு ஏச்சும், இகழ்வுக்கு இகழ்வும், இழிவுக்கு இழிவும் தாழ்ச்சிக்குத் தாழ்வும் எதிராளியிடமிருந்தும் வருமாகையால், சொல்லிழுக்குப் படுதல் இயல்பாயிற்று.

-இனி, பேசிய பேச்சுகளை எதிராளி பிறரிடத்து மாற்றியும் ஏற்றியும், திரித்தும் வலித்தும் கூறிப் பரப்புவது பழியாயிற்று.

- சோ காப்பர் - கடுஞ்சிறை காப்பர்.

-கடுஞ்சிறையுள் அடைக்கப்பட்டு, எப்பொழுது வெளியில் விடுவரோ என்று காத்துக் கிடப்பர்.

- காத்துக் கிடத்தல் எதிர்பார்த்து இருத்தல்.

- பொழுது காத்தான்- பொழுது எப்பொழுது போகுமோ அல்லது வருமோ என்று காத்துக் கிடந்தான் உலக வழக்கு.

- 'சோகாப்பர்’ என்பதற்கு உரையாசிரியர் பலரும் பலவாறாகப் பொருள் கூறுவர்.

- அவர்களுள் மணக்குடவர் 'சோகிப்பார்' என்றும், பரிதியார் 'துன்பம் வரும்' என்றும், பரிமேலழகர், 'அல்லாப்பர்', செம்மாப்பர் என்பன போலச் சோகாப்பர் என்பது ஒரு சொல் எனக்கூறி, 'துன்புறுவர்' என்றுமே பொருள் கூறுவர்.

நாவினால் விளையும் கொடுமையை இவ்விடத்துச் சுட்டியவர், அதனால் வரும் நன்மையை இதற்கு எதிர்மறையாகச் 'சொல்வன்மை’ என்னும் அதிகாரத்துள் ஒரு கருத்தைக் கூறுவார்.

'நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்(து) உள்ளதூஉம் அனிறு’

-

641

- என்பது, அது.

- பரிமேலழகர் பொருளுக்கு விளக்கம் கூறவந்த புலவர் கோ. வடிவேலு அவர்கள், 'சோகாப்பர் என்பதில் துன்பம் என்னும் பொருளையுணர்த்தும் ‘சோகம்' என்னும் பண்புப் பெயரின் விகாரமாகிய 'சோகாப்பு' என்பது பகுதி, அல்லாப்பர், செம்மாப்பர் என்பனவற்றில் அல்லாப்பு செம்மாப்பு என்பன பகுதிகள்' என்றும் கூறிப் பரிமேலழகரை வலுப்படுத்துவர்.

- ஆனால், இவற்றுக்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைத்துச் சொல்லாய்வுத் திறன் மிக்க மொழிஞாயிறு பாவாணர், சோகாப்பர் என்பதற்குக் ‘கடுஞ்சிறை காப்பர்' என்று பொருள் கூறி, அதற்கான விளக்கத்தைக் கீழ்வருமாறு விரிவாக எடுத்துரைப்பது கண்டு ஏற்கத்தக்கது என்க.