பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

13


அ-2 இல்லறவியல்



அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11
அதிகார முன்னுரை:


“செய்ந்நன்றி அறிதலாவது, அன்பும் ஆர்வமும் காட்டி, இன்முகம் கொண்டு, இனிது விருந்தோம்பி, நண்பெனும் நாடாச் சிறப்புப் பேணி, உலக அழுத்தத்தான் தாம் உளஞ்சோர்வுற்றிருந்த பொழுது, உழையிருந்து, அகத்தானாம் இன்சொல் வழங்கி, இனியவை கூறிப் பண்பின் தலைப்பிரியாது, பணிவுடையாராய் ஆற்றுதல் செய்த தகைமை மறவாது என்றென்றும் நன்றி நினைந்து, போற்றி. உற்றவிடத்து அவர் உவக்குமாறும் உய்யுமாறும் உதவியாற்றுதல் என்க.

இவ்வுலகத்துள்ளார் பெரும்பாலாரும் தம்மையும் தம் குடும்பத்தாரையுமே எண்ணி, இல்லவிடத்தும் உள்ளவிடத்தும் தந்நலமே பேணிப் பொதுநலம் மறந்து வாழ்ந்து வருதல் கண்கூடு ஆகலான், அவ்வாறின்றி, அவர் தமக்கு முன்பொருகால் ஆற்றுதல் செய்தவரை அகத்து நினைந்து புறத்துப் பேணித் தாமும் நன்று செய்தல் பொது நலப் பேரறன் ஆகுமென்று அறிவுறுத்தியதாகும், இது. -

நன்று செய்தல் நன்றியாயிற்று. இனிச் செய்த நன்றுக்குத் தாமும் தேவையானவிடத்து நன்று செய்தல் செய்ந்நன்றி அறிதல் ஆயிற்று. நன்று, நன்றியானது. நன்றுக்கு நன்று செய்தலைப் பிரித்துக் காட்டவே தனிச் சொல்லானது என்க.