பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

15


2. வையகமும் வானகமும்-ஆற்றல் அரிது . இவ்வுலகத்துள்ள நிலத்தையும், வானில் உள்ள மழைமேகத்தையும் வையகமும் வானகமும் என்றார். (வானம் இடவாகு பெயராக மேகத்தையும் சிறப்பாக மழை மேகத்தையும் அஃதாவது மழையையும் குறித்தது.

- நிலம் ஆற்றுதல் பயிர் விளைவை. வானகம் ஆற்றுதல் மழையை. ஆற்றல் ஆற்றுதல் உதவுதல். இங்கு மக்களுக்கு உதவுதல்.

ஆற்றுதல் என்பதொன் றலந்தவர்க் குதவுதல்’ (கலி)

என்றார் பிறரும். -

பயிரை நிலமும் அஃதாவது வையகமும், மழையை வானகமும் உருவாக்கி மக்களுக்கு உதவுதல், கேளாமலேயே செய்கின்ற உதவிகளாகும். -

இவ் வுதவிகளை, மக்கள் வையகத்திற்கும் வானகத்திற்கும் எந்த நலனும் செய்யமால் இருக்கும் போதே அவை செய்தலால் அவை செய்யாமற் செய்த உதவிகளாயின. -

ஒருவர்க்கு இன்னொருவர், அவர் எந்த உதவியும் செய்யாமைப் போதே செய்த உதவியையும், வையகமும் வானகமும் மக்கள் ஏதும் அவற்றுக்கு உதவாமைப் போதே செய்யும் உதவியையும் ஒப்பிட்டுக் காட்டி, அவை ஆற்றுகின்ற உதவிகளைவிட அவ் வின்னொருவர் செய்யும் உதவி மேலானது என்னும் பொருள் பெறுமாறு இக் கருத்தைக் கூறினார் என்க.

அஃதாவது, ஒருவர் தமக்கு இதுவரை எந்த உதவியும் செய்யாதிருக்கும் நிலையிலும், தாம் அவர்க்குச் செய்கின்ற உதவிக்கு இணையாக இவ் வையகமும், வானகமுங்கூடச் செய்வது கடினம் - அரிது - என்றார் என்க.

என்னை? வையகம் மக்களுக்கு உதவும் பயிர் விளைவை அவர்கள் அதற்கு எந்த உதவியும் செய்யாத பொழுதே உண்டாக்கித் தருமெனினும், அவர்களுக்குத் தேவையான விடத்துத் தேவையான பொழுது தேவையானதைத் தேவையான அளவு தராமற் போவதால், அவ்வுதவி மக்களுள் ஒருவர் இன்னொருவர்க்கு, அவர்க்குத் தேவையானவிடத்துத் தேவையான பொழுது தேவையானதைத் தேவையான அளவில் செய்கின்ற உதவிபோல் சிறப்புப் பெறாது என்க. எனவே, இத்தகு சிறப்பான உதவிக்கு இணையாக அது செய்வது அரிது என்றார் என்க.

இனி, வையகத்தைப் போலவே, வானகமும் தன்னகத்துள்ள மழையையும் அவ்வாறு தருதல் அல்லது உதவுதல் அல்லது செய்தல் அல்லது ஆற்றுதல் அரிது என்றார் என்க. -