பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை



18

அ-2-7 செய்ந்நன்றி அறிதல் - 11


பெறப்படுவதாகலின், பெறுகின்று முயற்சி பெரியதும், பெறப்படும் ஞாலம் சிறியதும் ஆகியதை இங்குக் கருதுதல் வேண்டும்.

எனவே, காலத்தால் செய்யப் பெற்ற உதவியைப் பார்க்கினும் ஞாலம் சிறியதாயிற்று. ஆகலின் ஞாலத்தின் மிகப் பெரியது என்றார், என்க.

3. இதனால், உதவி செய்வதில் பிறவற்றினும், செய்யப்பெறும் காலமே முகாமை வாய்ந்தது என்பது பெறப்பட்டது. முன்னர்ச் செய்யாமற் செய்யும் உதவியின் சிறப்பும் பெருமையும் கூறியவர், அது செய்யப்பட வேண்டிய காலத்தை முற்படுத்தி இதிற் கூறியதால், அதன் பின்னர் இது வைக்கப்பெற்றது.

௧௦௩. பயன்தூக்கார் செய்த உதவி நயண்துக்கின்
நன்மை கடலின் பெரிது.

103

பொருள்கோள் முறை இயல்பு.

பொழிப்புரை : (ஒருவர்க்கு உதவி செய்யும் பொழுது) அவரால் தமக்கு என்ன பயன் கிடைக்கும், எவ்வளவு பயன் கிடைக்கும் என்றெல்லாம் சீர்தூக்கிச் சிந்தித்துப் பாராமல் செய்கின்ற உதவியை நடுநிலையோடு ஆராய்ந்து பார்த்தால், அதனால் கிடைக்கும் நன்மை கடலினது நன்மையை விடப் பெரியது.

சில விளக்கக் குறிப்புகள்:

1. பயன்தூக்கார் செய்த உதவி - தாம் உதவி செய்பவரால் தமக்கு என்ன பயன் எவ்வளவில் கிடைக்கும் என்றெல்லாம் சீர்தூக்கிச் சிந்தித்துப் பாராமல் செய்கின்ற உதவி.

- பெரும்பாலும் ஒருவர்க்கு ஒருவர் உதவி செய்யுங்கால், அவரால் இவ்வுதவிக்கு ஈடாகத் தமக்குப் பின்னால் என்ன பயன் கிடைக்கும். எவ்வளவில் கிடைக்கும் என்று சிந்தித்துப் பார்ப்பதே உலகியல் வழக்கமாக உள்ளது. ஆனால் இவ்வாறெல்லாம் சிந்தித்துப் பாராமல் உதவி செய்தலே சிறப்பு என்றார். இத்தகைய உதவியே மேலான உதவி என்பது நூலாசிரியர் கருத்து. இங்குக் கீழுள்ள ஔவையாரின் பாடல் நினைக்கத் தகுந்தது.

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி
என்று தருங்கொல் எனவேண்டா - நின்று
தளரா வளர்தெங்கு தாளுண்ட நீரைத்
தலையாலே தான்தருத லால்

வாக்குண்டாம்!