பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

199


ஒவ்வொருவரும் பொதுவறத்தைக் கடைப்பிடித்தொழுகும் பொழுதே. தன்னறக் கடமைகளுக்கும் பெருமையும் சிறப்பும் உண்டாம் என்றவாறு.

2. பிறன் இயலாள் பெண்மை நயவாதவன் - பிறனுடைய இயங்குதலுக்குத் துணையவளாகிய அவன் மனைவியினது பெண்மையை விரும்பாதவனே.

இயல் - இயல்பு, இயங்குதில் தன்மை, பொருந்துதல், இணங்குதல், இயைபாக இருத்தல் முதலிய பொருள்கள் தரும் சொல்.

இயலாள் - இயங்குதலுக்கு உரியவள்.

பெண்மை - விரும்பப்படும் தன்மையான் வந்த பெயர்.

அழகு, சாயல், உருவம், மென்மை, நளினம் முதலிய நயத்தல் பொருள்களை உள்ளடக்கிய சொல்.

நயத்தல்-விரும்புதல், மனவுணர்வும் உடல் உணர்வும் கலந்த மேவுதலுணர்வு.

3. அறனியலால் இல்வாழ்வான் என்பான் - அறத்தின் இயங்குதலுக்கு உரிய முறையில் இல்வாழ்வை நடத்துபவன் என்று கூறப் பெறுவான்.

அறன்இயலால் அறத்தினது இயங்குதலுக்கு உரிய முறையில். அறமாகிய பொதுமை நல உணர்வின் அல்லது நெறியின் அடிப்படையில், என்னென்ன முறையில் எவ்வெவ்வாறு இயங்க வேண்டுமோ, அன்னன்ன முறையில் அவ்வவ்வாறு இயங்கும் தன்மையில்.

இல்வாழ்வான் என்பான் - தன் இல்வாழ்க்கையை நடத்துகிறவன் என்று பிறரால் சொல்லப் பெறுபவன்.

- என்பான், எனப்பெறுபவன் - எனும் இரண்டு முடிவுகளுக்கும் பொதுவாக ‘என்பான் என்றார்.

-அது, தானே கூறுதற் பொருளும், பிறரால் கூறப்பெறுதல் பொருளும்

4. இது, பிறனொருவன்தன் இல்லறத்திற்குத் துணைவியாகிய அவன் மனைவியை, இன்னோர் இல்லறத்தில் ஈடுபட்டவன் விரும்பாமையே, அறமாகிய பொதுமை வாழ்வியலுக்குப் பொருந்திய அறம் ஆகும் என்றது.