பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

அ-2-1 பிறனில் விழையாமை -15


கச.அ. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு

அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு.
– 148

பொருள் கோள் முறை : இயல்பு.

பொழிப்புரை: பிறனுடைய மனைவியை, மனம், அறிவு, உடல் ஆகிய மூன்று உணர்வுகளுடனும் நோக்காத (கட்டுப் படுத்தப் பெற்ற சிறந்த ஆண்மை, நற்குணங்கள் நிறைந்த சான்றோர்க்குத் தாம் கடைப்பிடிக்க வேண்டிய அறநெறி மட்டும் அன்று; மிகச் சிறந்தமைந்த தன்னொழுக்கமும் ஆகும்.

சில விளக்கக் குறிப்புகள் :

1. பொதுவாகச் சொல்லப் பெற்று வந்த பிறனில் விழையாத இவ்வறவொழுக்கம், இதன்வழிச் சான்றோர்க்குச் சொல்லப்பெறுகிறது. ஏனெனில், அவர்களின் பெருமையும் தகுதியும் நோக்கி, அவர்களைப் பிறர் அனைவரும் தத்தம் மனைகளுக்கு அழைக்கவும், அவர்களொடு தம் மனைவி மக்களை நெருங்கிப் பழகுவிக்கவும் வாய்ப்புண்டாகலின், அதனைப் பயன்படுத்திக் கொண்டு, சான்றாண்மையுடையாரும் ஒரோவொருகால், தம் புலனுணர்வு மிகுதியான், பிறன்மனை நயக்கலாகாது என அவர்க்கு எச்சரித்துக் கூறினார் என்க.

2. பிறன்மனை நோக்காத பேராண்மை - பிறனுடைய மனைவியை மனம், அறிவு, உடல் ஆகிய மூன்று உணர்வுகளுடனும் நோக்காத (கட்டுப் படுத்தப் பெற்ற சிறந்த ஆண்மை.

- 'நோக்குதல்' என்னும் சொல் மனவுணர்வு, அறிவுணர்வு, உடலுணர்வு ஆகிய மூன்றுணர்வுகளும் கலந்த பார்வை என்று பொருள்படுவது இதன் விரிவான விளக்கத்தைக் குறள் எண்,90-இல் காண்க)

- பேராண்மை - கட்டுப்படுத்தப்பெற்ற சிறந்த ஆண்மை என்க. என்னை:

ஆண்மை என்பது ஆளுமை. பெண்மை உட்பட உலகியற் கூறுகள் அனைத்தும் ஆளுமை செய்தல். பீடழிதல் ஆண்மையன்று.

'திருவினும் நல்லாள் மனைக்கிழத்தி யேனும்

பிறன்மனைக்கே பீடழிந்து நிற்பர்'
- நீதிநெறிவிளக்கம் : 79

என்றார் பிறரும்.

ஒருவனுக்கு ஒருத்தி என்னும் உலக மீமிசை மாந்தக் கோட்பாட்டை முதற்கண் இலக்கிய வடிவாய் அறநெறிப்படுத்திய நூல் இது.