பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

219


2. அதனை மறத்தல் அதனினும் நன்று - அவ்வாறு பொறுத்துக் கொள்வதினும், அத்தீமையை மனத்தில் வையாமல் மறந்து விடுவது மிக நன்மை பயப்பதாகும்.

அதனை - அவர் செய்த தீமையை.

- இச்சுட்டுச் சொல், அத் தீமையை மட்டுமே குறியாது, அதைப் பொறுத்துக் கொண்ட பெருமைச் செயலையும் சேர்த்தே குறிப்பதென்பதும் சிறப்பாகும், ஏனெனில் அஃதொரு பெருமித எண்ணம் ஆகையால்,

- இதனை யாம் பொறுத்தேம் என்று கருதாது, அப்பொறுத்தமை தன்னையும் என்று காலிங்கர் விளக்கம் தருவது போற்றத்தக்கது.

மறத்தல் - மறந்து விடுதல்.

- இங்கு ஒரு மனவியல் உண்மையை நாம் கவனித்தல் வேண்டும்.

- பெரும்பாலும் “மறத்தல் என்பது தானே நிகழ்வது, இஃதொரு

‘தன்விழைவில்லாச் (அனிச்சைச் செயல். -

- அதை மனம் செய்வது யாங்ஙன் எனில், அதை அறிவால் பெரிதாகக் கருதாத விடத்து, அச்செயல் (மறதி தானே நிகழுமாம் என்க, என்னை?

எண்ணுதல் என்பது அறிவும் மனமும் இணைந்த செயல்.

எண்ணாதவிடத்து, அறிவுணர்வு விலகி நிற்றலால், மனம் மட்டும் அவ்வெண்ணுதலைத் தானே நிகழ்த்தாதாம் என்க.

எவ்வாறெனில், அறிவு திரையும், மனம் ஓவியமும் போல என்க. திரையில்லா விடத்து ஒவியமும் இல்லாதல் போல, அறிவு இணையாவிடத்து, மனத்தின்கண் நினைவு நிகழாதாம் என்க. என்னை?

சென்ற இடத்தால் செலவிடாது. தீதுஒரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு - 422

- என்றாராகலின், -

எனவே, ஒருவர் செய்த தீமையையும் அதைப் பொறுத்தலும் ஆகிய தொடர்நிகழ்வை அறிவு துன்பப்பட்டும், பெருமிதப்பட்டும் நினையாவிடத்து, மனமும் தன் உணர்வில் அவற்றைக் கொள்ளாது மறந்துவிடுதல் இயல்பாம் என்க.