பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

27


முனைவர் சாமுவேல் சான்சனுக்குப் (Samuel Johnson) பெருந்தகைச் செல்வர் செசுட்டர் பீல்டு (Lord Chester Field) உதவியது போலவும், பொதுவுடைமைப் பேரறிஞர் காரல் மார்க்கசுக்குப் பெருஞ்செல்வர் எங்கல்சு உதவியது போலவும், பேரறிஞர் பீமாராவ் அம்பேற்கருக்கு பரோடா மன்னர் உதவியது போலவும், செயப்பட்டார் பெருமைக்கும் சால்புக்கும் எற்ற உதவிகளாக என்றென்றும் நின்று அவை பெருமையும் சிறப்பும் பெறுவனவாம் என்க.

இனி, இப் பாடலுக்குப் பழைய உரைகாரர்களான மணக்குடவரும், பரிதியாரும், காலிங்கரும், பரிமேலழகரும் இவ்வுதவியை, ஒருவர் செய்த உதவிக்குக் கைம்மாறாக உதவி பெற்றுக் கொண்டார் செய்யும் உதவியாகக் கருதி, அவ்வகையில் அவரால் திருப்பிச் செலுத்தப்பெறும் உதவி பெற்றுக் கொண்டவரின் பெருமைக்கும் பெருந்தன்மைக்கும் சான்றாண்மைக்கும் தகுந்தவாறு அமையும் என்று பொருள் கூறியுள்ளனர்.

மணக்குடவர், 'முன்னே செய்த உதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி, அவ்வுதவி செய்யப்பட்டார் தன்மை எவ்வளவிற்று, அவ்வளவிற்று அவர் செய்யும் மாற்றுதவி' என்றும்,

பரிதியார், 'முன்னே ஓர் உதவி செய்யாமல் செய்த நன்றிக்குத் தான் ஒரு நன்றி செய்வோம் என்றால், அவனைக் கெடுக்க நினைவதற்கு ஒக்கும்; நினையாமற் செய்த நன்றியை நினைத்திருப்பதே நன்று' என்றும்,

காலிங்கர், ‘உலகத்து உதவியாளரொருவர்க்கு உதவுகின்ற உதவி, பொருளினது வரம்பினை உடைத்தன்று; பின் பயக்கும் பெரும்பயன் மற்று என்னையெனின் அவ்வுதவியாளரால் ஓர் உதவிப் பொருளினைச் செய்யப்பட்டவர் தகுதி வரம்பினை உடைத்து' என்றும்,

பரிமேலழகர், 'கைம்மாறான உதவி காரணத்தானும் பொருளானும் காலத்தானுமாகிய மூவகையானும் முன் செய்த உதவியளவிற்றன்று; அதனைச் செய்வித்துக் கொண்டவர்தம் அமைதியளவிற்று' என்றும் கூறியுள்ளனர்.

இவ்வுரைகளுள் பரிதியார் உரை சிறிது வேறுபட்டுத் தோன்றுகிறது, எனினும் உதவிக்குக் கைம்மாறாகச் செய்யப் பெறும் உதவியைக் குறித்துத்தான் இயல்கிறது.

இற்றைப் பாவாணரும், பரிமேலழகரை ஒட்டியே பொருள் கூறிவிட்டுப் பின் விளக்கமாக, 'இக்குறள் கைம்மாறு பற்றியது என்பதற்கு அதில் ஒரு குறிப்புமில்லை. செய்யாமற் செய்ததும், காலத்தினாற் செய்ததும், கைம்மாறு கருதாமற் செய்ததும் பயனளவிற் பெரியதுமான நன்றிகள் இதுவரை கூறப்பட்டன. அவையல்லாது, பெரியார்க்குச் செய்த நன்றியென்றும் ஒரு சிறப்பு வகையுளது. அது இக்குறளிற் கூறப்பட்டுள்ளது' என்று விளக்கம் தந்துவிட்டு, மேலும்