பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்னும் குறளுள், “ஒருவர்க்கு எதற்குக் கொடுக்கிறோம், ஏன் கொடுக்கப்படல் வேண்டும், எவ்வளவு கொடுத்தால் போதும் என்றவாறான முறையில் அளவிட்டறிந்து ஈவதுதான் அஃதாவது உதவுவதுதான், பொருளினது பயனைப் போற்றியவாறு வழங்குகின்ற முறையாகும்” என்னும் கருத்தையும் ஏறத்தாழ இதே நோக்கில்தான் கூறுவார்.

இனி, அடுத்து 'சுற்றந்தழால்’ என்னும் அதிகாரத்தின்கண் வரும்

‘பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்’

- 528

என்னும் குறளுள், 'அரசன் தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் அனைவரையும் ஒரே தரத்தினராகப் பொதுவாக நோக்கமால் அவரவர் தகுதி வரிசையில் நோக்கி, அவரைப் பேணிக் கொள்ளுவானாயின், அதன் பொருட்டாகவே அவர்கள் நிறைவடைந்து அவனை விட்டு விலகாமல் அவனுக்குத் துணையாக அவனுடனேயே இருந்து வாழ்வர் என்னும் கருத்தைக் கூறுவதிலும் இக்குறளினது அடிச்சுவட்டைக் காணலாகும்.

மொத்தத்தில் நூலாசிரியர் கருத்து யாதாமெனில், பொருளாலும், செயலாலும் அல்லது வேறு எந்த வகையினாலும் ஒருவர் மற்றவர்க்கு உதவி செய்யும் பொழுது, அதைப் பெற்றுக் கொள்பவரின் தகுதி, திறன், குணநலன்கள் முதலிய சால்புத் தன்மைகளைக் கருத்தில் கொண்டே உதவுதல் வேண்டும் என்பதும், அப்பொழுதுதான் அவ்வுதவி சிறப்புக்கும் பெருமைக்கும் உரியதாகும்' என்பதே என்க.

மற்றவகையில் இதில் உதவி பெற்றுக் கொண்டவர் உதவி செய்தவர்க்குக் கைம்மாறாகத் தம் தகுதிப்பாடுகளுக்கேற்பத் திருப்பி உதவ வேண்டும் என்னும் கருத்துக்கு இடமில்லை என்று கூறி விடுக்க.

3.இவ் விரண்டு குறள்களாலும் உதவியைப் பெற்றுக் கொள்பவர் எத்தகையவராக இருத்தல் வேண்டும் என்பதை உதவி செய்பவர்க்கு உணர்த்தினார் என்க.

4. இனி உதவி செய்யப்பட்டார் சால்புடையவராக இருப்பின், அவரை உணர்ந்து அவர்க்கு உதவியைச் செய்பவரும் ஒரு வகையில் சால்பு (பண்பு) உடையவராகவே இருத்தல் வேண்டும் என்னும் ஒரு குறிப்பும் இதில் உண்டு என்பதை உண்ர்ந்து மகிழலாம்.

5. மிகக் குறைந்த சொற்களைத் தக்க முறையில் பயன்படுத்தி மிகச் சிறந்த கருத்தை உணர்த்தும் குறள்களுள் இதுவும் ஒன்றாகி ஆசிரியரின் கூர்மையான சொல்லாற்றலையும் நுண்மாண் நுழைபுலத்தையும் புலப்படுத்திற்று என்க.