பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

39


நல்வழிப் படுத்தும் நிலையிலும் உதவுவது என்பதும், தமக்கு ஒரு துன்பம் வந்தவிடத்து, ஆதரவு காட்டி அத் துன்பத்தினின்று தம்மைக் காத்தவர் ஏதோ ஒரு வகையில் தம்முடன் தொடர்பு கொள்ளாதவராய் விலகி நின்றாலும், தாம் அவர் தொடர்பை விடாது மதித்துப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதும், புலப்படுத்தப் பெற்றன என்க.

- இனி, இவ்விரண்டாவது கருத்தை, மேலும் ஒருபடி சென்று விளக்குமுகத்தான், அடுத்துப் பேசுவார்.

க0எ. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண் விழுமம் துடைத்தவர் நட்பு. - 107

பொருள்கோள் முறை :

தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு எழுமை எழுபிறப்பும் உள்ளுவர்.

பொழிப்புரை: தம்மை விழுத்திய துன்பத்துள் எழமுடியாமல் தாம் உழன்று கிடந்த பொழுது, அதை அறவே நீக்கித் தம்மை உய்யச் செய்தவர் நட்பைத் தாம் மட்டுமன்றித் தம்வழி எழுகின்ற ஏழு தலைமுறையினரும் நன்றியுணர்வுடன் நினைத்திருப்பர்.

சில விளக்கக் குறிப்புகள்:

1. இப் பாடலும் நட்பதிகாரத்துள் வரவேண்டுவது போலும் கருத்துள்ளது. நன்றியறிதல் முகாமை நோக்கி இதன்கண் இடம் பெற்றுள்ளது.

2. சென்ற குறளில் 'துன்பத்துள் துப்பாயார் நட்பு' என்றதன் மேற்சென்று, அத்துன்பத்தின் மிகுதி நிலையினையும், அதனின்றுந் தம்மை உய்யச் செய்தாரது அருளாண்மையினையும் உணர்த்தி, அந்நன்றியறிதல் உணர்வையும் நீட்டித்துச் சொன்னது.

3. தம்கண் விழுமம் துடைத்தவர் நட்பு - தம்மிடத்துத் தோன்றித் தம்மை விழுத்திய துன்பத்துள்தாம் எழமுடியாமல் அழுந்தி உழன்று கிடந்த பொழுது, அதை அறவே போக்கித் தம்மை உய்யச் செய்தவர் நட்பினை.

விழுமம் வீழ்த்திய மிகுதுன்பம்.

இஃது, இருவகையாகப் பொருள்தரும் சிறப்புச் சொல்.

ஒன்று, சிறப்பு பெருமை, மேன்மை என்னும் பொருள்களைத் தரும்

'விழு' என்னும் வேரடியாகப் பிறப்பது.

இரண்டு வீழ்தல், தாழ்தல், கீழிறங்குதல், கெடுதல், சாதல் என்னும்