பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 3.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அ-2-9 அடக்கம் உடைமை 13

அறிவடக்கம் - அறிவுச் செருக்கின்றி இருப்பது.

அறிவுச் செருக்கு அறிவு மிகுதியான் வருவது. அது, கல்வி, உடைமை, பதவி அல்லது அதிகாரம், சாதி அல்லது பிறப்பு, சமயம் ஆகிய ஐவகை நிலைகளான் வரும் செருக்கு.

இதனை, ஒண்மை உடையம் யாம் என்னும் செருக்கு (344) என்பார் நூலாசிரியர்.

மெய்யடக்கம் அல்லது உடலடக்கம் - உடலான் அடக்கி இயங்குவது. உடல் செருக்கின்றி இயங்குவது.

அஃது, உடல்நலம், உடல்வளம், அழகு, வலிமை, திறமை முதலியவற்றான் ஏற்படும். -

இதனை, தகைச் செருக்கு (915) என்பார் நூலாசிரியர். இவற்றை, உரையாசிரியர் பலரும் மனம், மொழி, மெய்களால் அடங்குவது என்று பொருள் விரிப்பர். மொழி அறிவடக்கத்துள் அடங்கும் ஆகலின் தனிக்குறிப்புக் கொள்ளாது. அறிவின்றி மொழி தனியே நில்லாதாகலின்,

இவ்வகையான மனச்செருக்கு, அறிவுச் செருக்கு, உடல் செருக்கு ஆகியவை யின்றி, அடங்கி நிற்றல் அடக்கம் என்க. அது கொண்டிருத்தலால் அடக்கம் உடைமையாயிற்று. - . -

இம் மூவகைச் செருக்காலும் அவற்றின் கூறுகளாலும் ஒருவன் எழுச்சிபெறுவது, பலவகை எதிர்ப்புகளுக்கும். பகைக்கும், புறக்கணிப்புக்கும், குற்றங்களுக்கும், தண்டனைகளுக்கும், அவனை ஆளாக்கும் என்பதால், அவற்றின் எழுச்சியின்றி அடங்கியிருத்தல் வேண்டும் என்பார்.

அடங்கியியங்குதலே அடக்கம், அஃது அடங்கியொடுங்குதல் அன்று. அடங்கி யொடுங்குதல் கோழைமை. அஃது அடிமைத் தன்மைக்கும் உரிமையிழப்புக்கும் கொண்டு சேர்க்கும். . - .

மாந்தன் உலகியலில் ஈடுபடும் பொழுது அடங்கியொழுகுதல் வேண்டும். அடக்கம் என்பது, பிறர் நம்மை அடக்கி நாம் அடங்குவதன்று. நாமே அடங்கி நிற்றல் என்பதாம். அது தன்னடக்கம் என்பர்.

உலகில், அனைத்துக் கூறுகளாலும் நம்மினும் சிறந்து நிற்பவர்கள் பலருளராகையால், நாமும் அவரிடை அடங்கியொழுகுதலே நமக்கு நன்மை பயப்பதாகும். அவ்வாறு அடங்கியொழுக வில்லை யெனில், பிறரால் அடக்கப்படுவது உலகியலும் இயங்கியலும் ஆகும். .

அடக்கமிலாதவரை, உலகம் புறக்கணிக்கும்; குறைத்து மதிப்பிடும் அடங்கியொழுகுபவரைப் பண்பாளர் என்று புகழும். இதனை மக்கட்கு வேண்டிய பண்புகளுள் ஒன்றாக ஆசிரியரும் கூறுவர். அறிவின் மிகச் சிறந்தாரேனும் பண்பில்லாதவரை ஓரறிவுள்ள மரம் என்று அவர் இகழ்வர்.