பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

அ-2-17 தீவினையச்சம் -21



- என்பது, புறத்தாக்கம்.

- அகத்தாக்கம் உள்ளத்தையும் அதன் வழி உயிரையும் வருத்தும். அதனால் மன அமைதி பெறாது. நோய்த்தாக்குற்றுத் துன்புறுத்தும்.

- புறத்தாக்கம், அரசு வழித்தண்டனை பெற்றுத்தரும்; அதனால் உயிரழிவும் நேரும்.

3) எனவே, தீவினை செய்வது, அது செய்தலோடு நில்லாது, அடுத்தடுத்து, அகத்தும், புறத்தும் பல்வகைத் தாக்கங்களைத் தந்து, இறுதியில் உயிரழிவுக்கும் காரணம் ஆவதால், அது செய்யற்க என்றார், என்க.

4) இது, முன்குறளில் கூறப்பெற்ற 'நோய்ப்பால தன்னை அடல் வேண்டாதான்' என்னும் கூற்றுக்கு, மேலும் ஒரு விளக்கமாக அமைதலின், அதன்பின்னர் நிரல் கொண்டது.


உ0அ. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. - 208.

பொருள்கோள் முறை: இயல்பு

பொழிப்புரை: தீய செயல்களைச் செய்தவர்க்கு வரவிருக்கும் கெடுதல், அவரைப்பின் தொடர்ந்து வரும் அவருடைய நிழல்போல், அவரைவிட்டு விலகாமல், அவரது காலடியிலேயே தங்கிக் கிடக்கும்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) தீயவை செய்தார் கெடுதல் : தீய செயல்களைச் செய்தவர்க்கு வரவிருக்கும் கெடுதல்,

கெடுதல் - வரவிருக்கும் தீங்கு.

2) நிழல் தன்னை வீயாது அடி உறைந்தற்று :

அவரைப் பின் தொடர்ந்து வரும், அவருடைய நிழல்போல், அவரைவிட்டு விலகாமல், அவரது காலடியிலேயே தங்கிக் கிடக்கும்.

- நிழல் - நில் + அல். நில்லாமல் தொடர்வது. நிலல் - என்பது,

சிறப்புநிலைச் சொல்லாகிய பொழுது, சிறப்பு 'ழ'கரம் பெற்றது.

'தோள்' போல் உதவுபவன் 'தோளன்' என்றாகி, சிறப்புச் சொல்லாக நிலை பெற்றபொழுது 'தோழன்' என்றாயதுபோல், என்க.

அது ஒரு பொருளின் அடியில் சாய்ந்து கிடிப்பதால், 'சாயல்' என்றும்