பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

105



பொழிப்புரை: ஒருவன் நேரிய வழியிற் செல்லாது. குறுக்கு வழியாகச் சென்று நலன்கள் பெற விரும்பிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யாதவன் எனில், அவன் கேடு இல்லாதவன் என்பதை அறிந்து கொள்க.

சில விளக்கக் குறிப்புகள்:

1) மருங்குஒடித் தீவினை செய்யான் எனின் : ஒருவன் நேரிய வழியில் செல்லாது, குறுக்கு வழியில் சென்று நலன்கள் பெற விரும்பிப் பிறர்க்குத் தீவினைகளைச் செய்யாதவன் எனின்,

மருங்கு ஒடி : பக்க வழியில் சென்று, குறுக்குவழி.

- நேர்வழியில்லாத பக்கவழி - குறுக்கு வழி - யாகச்சென்று.

ஒடி - விரைந்து சென்று.

- நேர்வழியாகச் செல்லாமல் குறுக்கு வழியில் சென்று - நலன்கள்பெற விரும்புதல்.

தீவினை செய்யான் எனின் : அவ்வாறு சென்று பிறர்க்குத் தீவினை செய்யாதவன் எனின்.

- தீவினை செய்து நலன்கள் பெற விரும்புவது குறுக்கு வழி என்க.

2) அரும்கேடன் என்பது அறிக : அவன் கேடு இல்லாதவன் என்பதை அறிந்து கொள்க.

அருங்கேடன் - அருமைக்கேடன்.

அருமை - செய்வதரிது.

இங்கு அருமை இன்மைப் பொருளில் வந்தது.

‘அரும்பெயல் ஊர்' எனில், 'அங்கு மழைபெய்வது அருமை' அங்கு

மழை பெய்யாது என்பது பொருள்.

- அருமை சிறப்புப் பொருளில் வருவது வேறு இன்மைப் பொருளில் வருவது வேறு.

- ‘அருங்காய்ப்பு உடைய மரம்' என்பது காய்ப்பது அருமை - காய்க்காத மரம் என்று பொருள் படுவது.

- 'அருவிருந்து வரும் வீடு' எனில், விருந்து வருவது அருமை - அஃதாவது விருந்து வராத வீடு - என்பது பொருள்.

‘அருங்கேடன்' என்பதும் இவைபோலாம் என்க. என்னை?

‘பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்