பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

113


போன்றது' என்று கூறி, 'அவர்கள் மக்களுக்கு மழைபோலும் சமநிலை நோக்கினர்களாக உதவுதல் வேண்டும்' என்னும் கடமையை வலியுறுத்துவார். அவ்வாறு பொதுப்பயன் கருதாமல் இருந்தால் அவர்தம் செல்வம், நன்மையில்லாத பயன்படாத செல்வம் ஆகிவிடும் என்றும் குறிப்புணர்த்துவார். 'நன்றியில் செல்வம்' என்னும் அதிகாரத்தில் அவர் கூறுவதிது.

‘சீருடைச் செல்வர் சிறுதுணி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து' - 1010

மாரிக்கு உள்ள சிறப்புகளிலேயே அதன் பொதுமைத் தன்மைதான் அனைத்தினும் உயர்ந்தது. பல பிரிவினராக உள்ள மக்கள் அனைவரையும், ஒரே தன்மையினராகக் கருதுவது அதன் தனிச்சிறப்பு.

‘மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ' - கபிலரகவல்

என்றார் கபிலர். இதுவே பொதுமையறத்திற்கும் சமநிலை உணர்வுக்கும் அடிப்படையானது.

 'பெயற்பால் மழைபெய்யாக் கண்ணும் உலகம்
செயற்பால செய்யா விடினும் - கயற்புலால்
புன்னை கடியும் பொருகடல் தண்சேர்ப்ப
என்னை உலகுய்யு மாறு’ - நாலடி : 97

- இச்செய்யுளுக்கு உரையெழுதிய ஆசிரியர் பதுமனார், எல்லா உயிர்களும் உயிர்வாழ்வதற்கு மழைபெய்தல் இன்றியமையாததுபோல, வறியோர்க்குப் பொருளுள்ளோர் ஈதல் இன்றியமையாதது என்பது கருத்து என்று கூறுதல் காண்க.

- மற்று, மாரியின் பொதுமைக் கடப்பாட்டைப் பண்டை நூலாசிரியர் பலரும் பாராட்டியுள்ளதை அறிந்து மகிழ்தல் வேண்டும்.

'பேரியலாளர் செய்கை ஊதியம் பிடித்தும் என்னார்
மாரியை நோக்கிக் கைம்மாறு இயற்றுமோ வையம் என்றான்'

- கம்ப. யுத்த நாகபாச. 271

‘வான்செய்யும் நன்றிக்கு வையகத்தோர் செய்யும்
கைம்மாறு உண்டேயோ' - திருவிளை. மாணிக்க. 86

'கழிந்தது பொழிந்தென வான்கண் மாறினும்...
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை' - புறம்: 203: 1, 3

'மழையின்றி மாநிலத்தார்க் கில்லை' - நான்மணி:46:1

'மறந்து கடல்முகந்த கமஞ்சூல் மாமழை