பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

123



பொழிப்புரை: ஒப்புரவு என்னும் பொதுமையறத்தைவிட நன்மை தரும் பிற செயல்களைத் தேவருலகம் என்று கூறப்படுவதிலும், இவ்வுலகத்தும் பெறுவது இயலாது.

சில விளக்கக் குறிப்புகள்:

1) ஒப்புரவின் நல்ல பிற : ஒப்புரவு என்னும் பொதுமை அறத்தைவிட நன்மை தரும் பிற செயல்களை.

ஒப்புரவின் - ஒப்புரவு என்னும் பொதுமை அறத்தை விட

நல்ல பிற : நன்மை தரும் பிற செயல்களை,

- 'பிற' என்பதைப் பாவாணர் அசைநிலை என்றது. பொருந்தாது.

அது பொருள் தருவதாகலின்,

- இவ்வுலகின் பற்பல அறச்செயல்களில் சமநிலை கருதும் பொதுமை அறமே சிறந்தது என்பதை ஆசிரியர் இக்குறளில் மிக்கு வலியுறுத்தியது உற்று நோக்கத் தக்கது. அதுவே அனைத்தினும் நன்மை தருவது. மக்களின், பொருளியல் வேறுபாடுகளைத் தவிர்க்க உதவுவது. இருப்பவர், இல்லாதவர் என்னும் ஏற்றத் தாழ்வைக் களைவது.

- பொருளியல் வேறுபாடு களையப்பெறின், பிற அனைத்து வேறுபாடுகளும் கால் கொள்ளாவாம் என்க.

2) புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே : தேவருலகம் என்று கூறப்படுவதிலும், இவ்வுலகத்தும் பெறுவது இயலாது.

- புத்தேள் உலகத்தும் தேவருலகம் என்று கூறப்படுவதிலும்,

- 'புத்தேள் உலகம்' என்பது ஒரு கற்பனைக் கருத்தே யன்றி உண்மையன்று. அஃது ஆரியச் சார்பானது.

- அவ்வாறான ஒரு கற்பனையை அக்காலத்து மக்கள் கொண்டிருந்ததால், அதனை ஆசிரியரும் குறிப்பிட்டுக் கூறவேண்டியிருந்ததென்க

'நல்லாறு எனினும் கொளல்மீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று’ - (222)

- எனும் குறளில், ஈதல் அறம் செய்பவர்க்கு, மேலுலகம் என்று கூறப்பெறும் அத்தேவருலகம் இல்லை என்றாலும், அவ் வீதலைச்செய்து, கடமை ஆற்றுக என்று கூறுவதிலிருந்தே, அவ்வுலகத்தைப் பற்றியும், அங்குக் கிடைக்கும் நன்மை பற்றியும் அவர் கவலைப் படவில்லை என்றும் மக்களும் அது பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை என்று கூறினார் என்றும் அஃது, அவ்வாறு இருப்பதாகக் கருதினும், அங்கும்