பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

124

அ-2-18 ஒப்புரவறிதல் 22


கிடைக்கும் நன்மைகளைவிட, இவ்வுலகத்துச் செய்யும் ஈதல் அறத்தாலேயே, மக்களை நலம்பெறச் செய்தல் இயலும் என்று அவர் கருத்துக் கொண்டிருந்தார் என்றும், உய்த்துணர முடிகிறது, என்க.

- மற்று, புத்தேள் உலகம் பற்றிய பிற விளக்கங்களைக் குறள் 58-இன் உரை விளக்கத்துள் கண்டு கொள்க.

- பெறல் அரிது :பெறுவது இயலாது. அரிது - இன்மை குறித்தது.

- பெறுவது இயலாது என்பதை முதலில், புத்தேளிர் உலகத்துக் குறித்தது என்னெனில், காணா உலகக் கற்பனை நலன்கள், உண்மை உலகத் துன்பங்களை நோக்கப் பெரிதும் உவகைக்கும் வேட்கைக்கும் அவாவுதலுக்கும் உரியவாகையால், அவை மெய்யன்று, பொய்யாம் எனக் காட்டற்கென்க. மேலும் ஈத்துவக்கும் இன்பம் இல்லாத அவ்வுலகம் பெருமைக்குரியதன்று என்னும் குறிப்புமாம்.

- அடுத்து, ஈண்டும் அஃதாவது இவ்வுலகத்தும் பெறலரிது என்றது, பிறபிற செயல்முயற்சிகளெல்லாம், பொதுமையறம் கருதாது தந்நலம் சான்றவையாகவே இருப்பனவாகலான் என்க. என்னை?

- ஈதல் இன்பமே இன்பம் என்பது ஆசிரியர் கருத்தாகலின்.

‘ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கண் அவர்’ - 228

‘இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்துஇவ் வுலகு' - 387

‘சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்’ - 524

‘கொடுப்பது உம் துய்ப்பது உம் இல்லார்க்கு அடுக்கிய
கோடிஉண்டாயினும் இல்’ - 1005

'ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்(று)
ஈதல் இயல்பிலா தான் - 1006

'அற்றார்க்கொன்(று) ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று’ - 1007

'நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று’ - 1008

- இனி, செல்வத்தைத் தொகுத்து வைத்துக் கொண்டு பிறர்க்கு ஈயாத கயவரிடம் அடித்துப் பிடுங்குதலையும், உளவுபோல் ஓரிடத்துக் கூறுவர், ஆசிரியர்.