பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/127

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

125


‘ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு - 4077

3) இக்குறளால், மக்களைப் பொருள்நிலையால் சமநிலைப் படுத்தும் ஒப்புரவுக் கொடையே இவ்வுலகத்து அனைத்துச் செயல்களிலும் இன்பம் உடையது; உயர்ந்தது; சீரியது - என்பது ஆசிரியர் கருத்தாதல் காண்க

- அவர் காலத்திலிருந்து நிலவுடைமைக் குமுகாயமும் அரசுரிமை ஆட்சியும் ஆகலின், அவற்றுக் கேற்றவாறு பொருளுடைமை கொண்டவர்கள் பொதுமை உணர்வினைத் தங்கள் அளவில் தாங்களே விரும்பி மேற்கொண்டு, தங்கள் செல்வங்களைப் பிறர்க்கும் பகிர்ந்து அல்லது கொடையாகக் கொடுத்து, இல்லாமையை நிரவல் செய்தல் வேண்டுமென்று ஆசிரியர் ஒர் அறவுணர்வாகக் கூறும் உணர்வே 'ஒப்புரவறிதல்' உணர்வாகும் என்பதை நன்குணர்ந்து கொள்க.

அவர் வாழ்ந்திருந்த காலத்து, இதனினும் மேலாக ஓர் அறநூலாசிரியர் சிந்தித்தல் இயலாததாம் என்க. செல்வம் பெறுதலும் அஃதில்லாததும், தலைவிதிக் கொள்கையாகக் கருதுகின்ற, ஆரியரின் பிறவிக் கோட்பாடு பரவிவந்து கொண்டிருந்த அக்காலத்து, பொருட்சமநிலையை நூலாசிரியர் இந்த அளவில் சிந்தித்ததே பெருமையுடைய தென்க. ஆரியரின் விதியியற் கோட்பாட்டின் படியும், இம்மை மறுமைக் கொள்கையின்படியும், இருப்பவர் இல்லாதவர்களுக்குக் கொடுக்கும் 'தர்ம'வியல் கருத்து, (தமிழியலின் ‘ஈகை'யியல் வேறு, ஆரியரின் 'தர்ம'வியல் - என்பதை ‘அறன்வலியுறுத்தல்’ அதிகாரத்தில் கொடுக்கப் பெற்ற விரிவான விளக்கத்துள் கண்டுகொள்க)

புண்ணிய பாவக் கொள்கையின் அடிப்படையிலேயே சிந்திக்கப் பெற்றது என்பதற்கு இவ்வதிகாரத்திற் கெழுதிய முன்னுரையில், பாவாணர் எடுத்துக் காட்டிய,

'இம்மை செய்தது மறுமைக் காமெனும்
அறவிலை வணிகன் ஆயலன் பிறரும்
சான்றோர் சென்ற நெறியென
ஆங்குப் பட்டன்(று) அவன்கை வண்மையே' - புறம்: 134

- என்று ஆயை, உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடலே தக்க சான்றாம், என்க. இப் பாடலின்கண் ஆரியரின் இம்மை, மறுமை, புண்ணிய பாவக் கோட்பாடு மறுக்கப்பெற்றுத் தமிழியல் மரபின் ஈகையுணர்வே தலையெடுத்து நிற்றலும் கண்டுணர்தற்குரியது.என்க.

இஃதேயன்றி மேலும், அப்புலவர் அதே ஆயைப் புகழ்ந்து பாடிய வேறு பாடல்களிலும் அவ்வறவுணர்வின் தமிழியல் பார்வை கூறப்பெற்றிருப்பதும் உடன் வைத்துக் கண்டு உணர்தற் குரியதாம், என்க.