பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128

அ-2-18 ஒப்புரவறிதல் 22


பெருமைக்கு உரியவனாவான். அவ்வாறு அல்லாதவன், இறந்துபோனவனாகவே கருதப் படுவான்.

சில விளக்கக் குறிப்புகள்:

1) ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்: (உலகமக்கள்) அனைவரது நலனுக்கும் ஒத்த பொதுமையறச் செயலை அறிந்து, அதன்படி நடப்பவனே உயிர்வாழ்கிறான் என்னும் பெருமைக்கு உரியவனாவான்.

ஒத்தது: உலக மக்கள் அனைவரது நலனுக்கும் ஒத்த பொதுமையறச் செயலை,

அறிவான்: அறிந்து அதன்படி நடப்பவன்.

- அறிதல் - வெறும் அறிந்து கொள்ளுதலன்றி, அதன்படி நடப்பதும் ஆகிய செயலை உள்ளடக்கியது.

உயிர்வாழ்வான்: 'உயிர் வாழ்கிறான்’ என்னும் பெருமைக்கு உரியவனாவான்.

- உயிரொடு வாழ்ந்தாலும், அவன் வாழ்க்கை சிறப்புடையதாக இருந்தால் மட்டுமே, அவன் 'வாழ்கிறான்' என்று சொல்லப் பெறும் பெருமைக்கு உரியவனாகிறான்.

- மற்று, உயிரொடு இருப்பது, உலவுவது உண்பது, உறங்குவது, உடலுறவு துய்ப்பது முதலியவை எல்லாம் பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் பொதுவாகையால்

- அவையெல்லாம் வாழ்கின்றன என்று சொல்லப் பெறுதலுக்கு உரியன அல்ல. எனவே, அவைபோல் இருப்பவனும் வாழ்கின்றவன் ஆகான்.

- 'கிளி வாழ்கிறது' 'மாடு வாழ்கிறது' என்று எவரும் கூறார். 'கிளி உயிரோடு இருக்கிறது' 'மாடு உயிரோடு உள்ளது' என்று மட்டுமே அவை கூறுதற்கு உரியவை, என்க.

- எனவே, உயிர் வாழ்தல் என்று சொல்வதற்கு உரியவர் மாந்தரே. இனி அவருள்ளும் அப் பறவைகள் போலும், விலங்குகள் போலுமே உயிர்த்துக் கொண்டு, அவை செய்து கொண்டிருக்கும் செயல்களைப் போலவே செய்துகொண்டிருப்பார்களாயின், அவர்களும் ‘உயிரோடு இருப்பவர்கள்' என்றே சொல்லப்படுவதற்குரியவர்கள் . அவர்கள் வாழ்பவர்கள் என்று சொல்லப் பெறுதற்கு உரியர் அல்லர் - என்பார் என்க.

- இனி, இவர் போலும் 'வாழ்கின்றவர்' என்று. வேறு இடங்களிலும் ஆசிரியர் சிலரைக் குறிப்பிட்டுள்ளது, இவ்விடத்துக் கவனிக்க