பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

131


இறந்தாராகக் கருதப் பெறுபவர்கள்,

'நம்பியவர்கள் இல்லங்களில் தீமை செய்து வருபவர்கள்’

'புகழ்பெறுமாறு வாழாதவர்கள்’

‘சினத்தை மிக்குடையவர்கள்’

‘உயிர்களைக் கொல்லுகின்ற தீய தொழில் செய்பவர்கள்’

'ஏராளமான செல்வங்களைத் திரட்டி
வைத்துக் கொண்டு கஞ்சத்தனமாய்
அவற்றைத் காத்துக் கிடப்பவர்’

- ஆகியோர் ஆவர், என்று ஆசிரியர் கூறுவர்.

- இனி இவர்களுடன், மக்கள் நலம் கருதும் சமநிலைப் பொதுமையறவுணர்வு இல்லாதவனும், செத்தவனாகவே கருதப்படுவான் என்று இதில் கூறுவர்.

3) முன்னைய மூன்று குறட்பாக்களிலும் ஒப்புரவுணர்வின் பெருமை கூறியவர், இதில் அவ்வுணர்வுள்ளவனின் மேன்மையும், அஃதில்லாதவனின் இழிவும் கூறப்பெறுவதால், இஃது இங்கு இடம் பெற்றது என்க.


உகரு. ஊருணி நீர்நிறைந்து அற்றே உலகுஅவாம்
பேரறி வாளன் திரு. - 215

பொருள்கோள் முறை:

உலகு அவாம் பேரறிவாளன் திரு
ஊருணி நீர்நிறைந்து அற்றே.

பொழிப்புரை: ஒப்புரவுணர்வு உடைமையால், உலக மக்கள் மிக விரும்புகின்ற பேரறிவுடையவன்னின் செல்வம், ஊர் மக்கள் பயன்படுத்துகின்ற தண்ணிர்க் குளம் நீர் நிறைந்திருத்தல் போல்வதாம் என்க.

சில விளக்கக் குறிப்புகள்:

1) உலகு அவாம் பேரறிவாளன் திரு : ஒப்புரவுணர்வு உடைமையால் உலக மக்கள் மிக விரும்புகின்ற பேரறிவுடையவனின் செல்வம்.

- பேரறிவுள்ளவன், உலகமக்களின் சமநிலைப் பொதுவுணர்வை விரும்புவதால் அவனை மக்கள் மிக விரும்பி இருப்பர். என்னை?