உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருக்குறள் மெய்ப்பொருளுரை 4.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் மெய்ப்பொருளுரை - பெருஞ்சித்திரனார்

141



இடனில் பருவம்: இடம் இல்லாத காலம். இயலாத காலம். அஃதாவது வறுமையுற்று அவ்வறத்தைத் தொடர்ந்து செய்ய இயலாத காலம்

ஒல்கார் : மனம் தளர மாட்டார்.

ஒல்குதல் - தளர்தல், மெலிதல், தவிர்த்தல், விட்டு நீங்குதல் முதலிய பொருள் தரும் சொல்.

3) தம்மால், ஒப்புரவு அறத்தைத் தொடர முடியாதவாறு வறுமையுற்ற காலத்தும், அதை தம்மால் இயன்ற வரையிலும் இருப்பதைக் கொண்டு செய்வார். அல்லது தம் உடைமைகளை விற்றேனும், கடன் கொண்டேனும் அவ்வறைத்தைத் தொடர்ந்து செய்வார்.

4) இக் கருத்தைச் சான்றோர் பிறரும் ஒப்பக் கூறுவர்.

‘இல்லா இடத்தும் இயன்ற அளவினால்
உள்ள இடம்போல் பெரிதுஉவந்து - மெல்லக்
கொடையொடு பட்ட குணனுடை மாந்தர்க்கு
அடையாவாம் ஆண்டைக் கதவு’ . - நாலடி:91

‘உடுக்கை யுலறி உடம்புஅழிந்தக் கண்ணும்
குடிப்பிறப் பாளர்தம் கொள்கையிற் குன்றார். - நாலடி:141:1-2

'செய்கை யழிந்து சிதல்மண்டிற் றாயினும்
பெய்யா ஒருசிறை பேர்இல் உடைத்தாகும்
எவ்வம் உழந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
செய்வர் செயற்பா லவை’ - நாலடி. 147

'ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறுஉம்திங்கள்போல்
செல்லாமை செவ்வன்நேர் நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்’ - நாலடி. 148

'செல்லா இடத்தும் குடிப்பிறந்தார் செய்வன
செல்லிடத்தும் செய்யார் சிறியவர் -நாலடி:149:1-2

‘எற்றொன்றும் இல்லா இடத்தும் குடிப்பிறந்தார்
அற்றுத்தற் சேர்ந்தார்க்கு அசைவிடத்(து) ஊற்றாவார்
அற்றக் கடைத்தும் அகல்யாறு அகழ்ந்தக்கால்
தெற்றெனத் தண்ணீர் படும்’ - நாலடி:150

'நரம்பெழுந்து நல்கூர்ந்தார் ஆயினும் சான்றோர்
குரம்பெழுந்து குற்றம் கொண்டேறார் - உரங்கவறா